இந்தியாவுக்கு ரூ.1,178 கோடி மதிப்புள்ள ஏவுகணைகள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,
இந்தியாவுக்கு ‘மாபெரும் பாதுகாப்பு கூட்டாளி’ என்ற அந்தஸ்தை கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்கா அளித்தது. இதன்மூலம், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு சமமாக அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இந்தியா பெற முடியும்.
அந்தவகையில், விமானத்தில் இருந்து செலுத்தி, கப்பல்களை தகர்க்கவல்ல ஏவுகணைகளை தங்களுக்கு விற்பனை செய்யுமாறு அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக்கொண்டது.
இந்தியாவின் வேண்டுகோளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது. விமானத்தில் இருந்து செலுத்தி கப்பல்களை தகர்க்கும் 10 ஏவுகணைகளையும், நீருக்குள் பாய்ந்து சென்று நீர்மூழ்கி கப்பல்களை தகர்க்கும் 16 இலகுரக ஏவுகணைகளையும், 3 சாதாரண ஏவுகணைகளையும் இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் தெரிவித்துள்ளது.
10 ஏவுகணைகளின் மதிப்பு ரூ.699 கோடி ஆகும். மற்ற 19 ஏவுகணைகளின் மதிப்பு ரூ.479 கோடி ஆகும். மொத்தம் ரூ.1,178 கோடிக்கு இந்த ஏவுகணைகள் விற்கப்படுகின்றன. அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம், தனது இந்த முடிவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இதுதொடர்பான 2 அறிவிப்பாணைகளை தாக்கல் செய்தது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகன்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த ஆயுத தளவாடங்கள் மூலம் இந்தியா, எதிரி நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து தன்னை காத்துக்கொள்ள முடியும். தனது பாதுகாப்பை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த தளவாடங்களை தனது படைப்பிரிவில் சேர்த்துக் கொள்வதில் இந்தியாவுக்கு எந்த கஷ்டமும் இருக்காது. மேலும், இந்த விற்பனையால் பிராந்தியத்தில் ஆயுத போட்டி ஏற்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply