வடகொரியா, குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் கொரோனாவுடன் போராடிவரும் நிலையில் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
வடகொரியா ஏவுகணை சோதனை
பியாங்காங்:
கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் கதிகலங்கி நிற்கின்றன. நாள்தோறும் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
ஆனால் வடகொரியா கொரோனாவின் பிடியில் சிக்காமல் தப்பியுள்ளது. அங்கு இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என அந்த நாட்டு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதனால் உலக நாடுகள் கொரோனாவுடன் போராடிவரும் நிலையில், வடகொரியா எந்தவித பதற்றமும் இன்றி அணு ஆயுத சோதனை மற்றும் ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்
இந்த நிலையில், வடகொரியா, நேற்று குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான முன்சோனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் பல மைல் தொலைவுக்கு சென்று ஜப்பான் கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் நிறுவனரும், அந்த நாட்டின் தற்போதைய தலைவர் கிம் ஜாங் அன்னின் தாத்தாவுமான கிம் இல் சுங்கின் 108-வது பிறந்தநாள் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக வடகொரியாவில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க அமைப்பான அரசு விவகாரங்கள் ஆணையத்தை தலைவர் கிம் ஜாங் அன் மாற்றியமைத்தார். 13 உறுப்பினர்களை கொண்ட இந்த ஆணையத்தில் 5 உறுப்பினர்களை அவர் மாற்றினார்.
Leave a Reply