முதியோர் உதவித்தொகை வீடு தேடி வரும் எனவும், யாரும் வங்கிக்கு செல்ல வேண்டாம் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

சென்னை,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சென்னை எழிலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டியதால் முதியோர்கள் வங்கிக்கு வர வேண்டாம். வங்கி ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று முதியோர் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தன்னார்வலர்கள் ஏழை, எளியவர்களுக்கு சேவை செய்வதற்கு எந்த தடையும் இல்லை. சேவை செய்கிறவர்களும், சேவையை பெறுகிறவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில்தான் தமிழக அரசு சில வழிமுறைகளை செய்துள்ளது. தன்னார்வலர்களை வழிநடத்துவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் 2,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 58 ஆயிரம் தன்னார்வலர்களும் பதிவு செய்துள்ளனர். அரசுக்கு சேவை செய்கிறவர்களை தடைசெய்ய வேண்டும் என்பது நோக்கம் அல்ல. அரசியல் கட்சிகள் இதுபோன்ற பேரிடர் காலங்களில் உதவி செய்வது பாராட்டத்தக்கது, வரவேற்புக்குரியது.

ஆனால் மற்ற பேரிடருக்கும், இந்த பேரிடருக்கும் வித்தியாசம் இருக்கிறது. தற்போதுள்ள பேரிடரால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் சமூக இடைவெளி கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். நிவாரண பணிகளில் ஈடுபடுகிறவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அதற்கும் அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். நிவாரண பணிகளை வழங்க வேண்டாம் என்று சொல்லவில்லை, அதை வரைமுறைப்படுத்தி உள்ளோம். அந்த வழிகாட்டுதலை கடைப்பிடிப்பதில் எந்த தவறும் இல்லை. இது எல்லோருக்கும் ஒரு புதிய அனுபவம் ஆகும். சமூக இடைவெளி சவாலாக இருப்பதை அரசு கண்காணிக்க தவறி விடக்கூடாது. அதை அவர்களுக்கு எடுத்துச் சொல்வது அரசின் கடமை.

அமைச்சர்களை வைத்தோ, எம்.எல்.ஏ.க்களை வைத்தோ உதவி செய்யுங்கள் என்று சொல்லவில்லை. உள்ளாட்சி அதிகாரிகளை முன்வைத்து, பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி உதவி செய்யுங்கள் என்றுதான் சொல்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *