தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10 வயதுக்கு உட்பட்ட 31 குழந்தைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
சென்னை,
சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய 25 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 தனியார் பரிசோதனை மையங்கள் ஆகும்.
நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 91 பேர் ஆகும். மேலும் 4 பேர் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் 3 பேர் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஆகும்.
தமிழகத்தில் வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார பரிசோதனை மையம் என 2 அரசு நிறுவனங்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 11 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் 58 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிறுவன ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த தகவல் போலீஸ் மற்றும் பிற துறைகளுடன் இணைந்து தினமும் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான பரிசோதனை செய்யப்பட்டு வீடு அல்லது மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய அறிவுரைகள் அரசு வழங்கி உள்ளது.
சென்னையை சேர்ந்த டாக்டருக்கு ஆந்திராவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது உடலை தகனம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் மூலம் சரி செய்யப்பட்டு உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் கொரோனா பாதித்தவர்களின் உடல் தகனம் செய்வதில் பிரச்சினைகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
துரித பரிசோதனை உபகரணங்கள் (ராப்பிட் பரிசோதனை கிட்) வருவதற்காக காத்திருக்கவில்லை. கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள், அதிக மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவோர், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வீடு திரும்பியோருக்கு ‘பிளாஸ்மா’ பரிசோதனை செய்யது அதன் மூலம் சிகிச்சை அளிப்பதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளோம்.
ஓரிரு நாளில் இந்த ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்புதல் கிடைத்தவுடன் ‘பிளாஸ்மா’ பரிசோதனை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று சமூகத்தில் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். 10 வயது உட்பட்ட 31 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply