அமெரிக்க போர்க்கப்பலில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 550 ஆக உயர்ந்துள்ளது.
நியூயார்க்,
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல், பிலிப்பைன்ஸ் அருகே உள்ள குவாம் தீவில் உள்ள ஆப்ரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
அணுசக்தி மூலம் இயங்கும் இந்தக் கப்பலில் 114 மாலுமிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தங்களை அரசு கண்டு கொள்ளவில்லை என கப்பலின் தலைமை அதிகாரி பிரட் குரோஷியர் அமெரிக்க ஊடகங்களுக்கு கடிதம் அனுப்பினார்.
இதனால் அரசை அவமதித்ததாகவும், தேவையில்லாமல் பீதியை ஏற்படுத்தியதாகவும் கூறி அமெரிக்க கடற்படை தலைவர் (பொறுப்பு) தாமஸ் மோட்லி அவரை பதவி நீக்கம் செய்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி எதிர்க்கட்சியினரின் கண்டனங்களுக்கு வழிவகுத்ததால் தாமஸ் மோட்லி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், கப்பலில் வைரஸ் தொற்று பரவல் வேகமாகியுள்ளது. இதனால் கப்பலில் மொத்தம் உள்ள 4,800 மாலுமிகளில் 10 சதவீதம் பேருக்கு கொரோனா பரவிவிட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தியோடர் ரூஸ்வெல்ட் கப்பலில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 550 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கப்பலில் 92 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 550 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், 3,673 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது” என கூறினார்.
Leave a Reply