தமிழக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதையும், பொருளாதாரமின்றி தவிக்கின்ற தொழிலாளர்களையும் கவனத்தில் கொண்டு தமிழக அரசு கேட்டுள்ள நிதியை மத்திய அரசு உடனே வழங்க கோரி ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு கொரோனா ஒழிப்புக்காக பல்வேறு துறைகளின் மூலம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும், ஊரடங்கை அமல்படுத்தியதும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் கொரோனாவுக்கு எதிராக ஊரடங்கை நீட்டிக்கவும், கொரோனா பாதிப்பில் இருக்கின்ற தமிழக மக்களுக்கு கூடுதல் நிதி வழங்கவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
முக்கியமாக மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழகத்திற்கு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார்.
குறிப்பாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ. 2000 வழங்கவும், விவசாயத் தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2000 வழங்கவும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பருப்பு, மசாலா உள்ளிட்ட பொருட்களை மாநிலங்களுக்கிடையே லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதையும், பொருளாதாரமின்றி தவிக்கின்ற தொழிலாளர்களையும் கவனத்தில் கொண்டு இக்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகம் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதை பிரதமர் நன்கு அறிவார்கள்.
எனவே பிரதமர் மோடி தமிழக முதல்-அமைச்சரின் கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டு உடனடியாக நிதியை ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Leave a Reply