பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சைதை துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று, நம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்கும், நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு வருவதற்கும், என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். டெங்கு காய்ச்சல் படுவேகமாகப் பரவிய காலத்தில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, மக்களைக் காப்பாற்றுவதற்கு எடுத்த சரித்திர புகழ்வாய்ந்த ஒரு நடவடிக்கையை தங்களுக்கு இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். அவரைப் போன்று, கொரோனா வைரஸ் கொடூரத்திற்கு தாங்கள் ஒரு முடிவுகட்டி, தமிழ் மருத்துவத்தின் பெருமையை உலகறியச் செய்து, நீங்கள் பேரும், புகழும் அடைய வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
சித்த மருத்துவம் என்பது தமிழர்களின் பாரம்பரிய சொத்து. அண்டத்தில் உள்ளதே பிண்டம். பிண்டத்தில் உள்ளதே அண்டம் என்பது உலகத்தின் முதல் விஞ்ஞானியாக கருதப்படும் சித்தர் பொன்மொழி.
நான் சென்னை பெருநகர மேயராகப் பொறுப்பேற்ற நேரத்தில், டெங்கு காய்ச்சலுக்கு அலோபதியில் மருந்தே இல்லை என்று சொல்லப்பட்டதைக் கேட்டு அதிர்ந்தே போனேன். உடனடியாக பல்வேறு சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, அதன் அடிப்படையில், நிலவேம்புக் குடிநீரும், பப்பாளி இலை சாறும் சிறந்த தீர்வு என்பதைக் கண்டறிந்தேன். இந்தத் தீர்வு சரிதானா என்பதை, சென்னை கிங்ஸ் மருத்துவ நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள செய்தேன். அது, டெங்கு நோயை குணப்படுத்துவதில் மிகவும் சிறப்பாக செயலாற்றுவது உறுதியானதும், அந்த ஆய்வு அறிக்கையோடு அன்றைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனுடன் இணைந்து, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தகவல் தெரிவித்தோம்.
அவரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். உடனடியாக நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு இரண்டையும் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக வழங்க உத்தரவு பிறப்பித்தார். சென்னை மற்றும் தமிழகம் எங்கும் ஆயிரக்கணக்கான மருத்துவ முகாம் நடத்தி, நோய் தொற்று ஏற்படாமல் தமிழகத்தைக் காப்பாற்றினார். அரசு மருத்துவமனை மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் நிலவேம்புக் குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு பயன்படுத்த உத்தரவிட்டு, அதனை பத்திரிகைகளில் முழு பக்க செய்தியாகவும் வெளியிட்டு மக்களிடம் மாபெரும் விழிப்புணர்வு உருவாக்கினார்.
அதனாலே, டெங்கு நோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அப்படியொரு தருணம் மீண்டும் உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் கிருமிகளுக்கு அலோபதியில் மருந்து இல்லை என்று உலக சுகாதார நிறுவனமே அறிவித்துவிட்டது. இந்த நேரத்தில், நம் பாரம்பரிய சித்த வைத்தியத்தின் பெருமையை உலகறிய நிலைநாட்டவும், அதன் மூலம் நம் விவசாயத்திற்கும், விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தவும் ஓர் அரிய வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்துள்ளது.
ஆம், இப்போது கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக பல பாரம்பரிய சித்த வைத்தியர்கள் கூறிவருகிறார்கள். அதேபோன்று கொரோனாவுக்கு மருந்து மற்றும் தடுப்பு மருந்துகளை தயார் செய்வதற்கான குறிப்புகள் நிறைய மருத்துவர்களிடம் இருக்கிறது. ஆகவே, பாரம்பரிய வைத்தியம் மூலம் கொரோனா வைரசை வெல்லமுடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அனைத்து மாற்று மருத்துவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தும் முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
பாட்டி வைத்தியம், அஞ்சறைப்பெட்டி வைத்தியம் கை வைத்தியம் என்றெல்லாம் அழைக்கப்படும், நம் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மீட்டெடுக்கும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்து மற்றும் தடுப்பு மருந்துகளைக் கண்டறிந்து, பல்லாயிரம் ஆண்டுகளாக இம்மண்ணில் வாழ்ந்துவரும் சித்தபெருமக்களின் மகத்துவத்தை உலகறியச் செய்ய வேண்டும்.
நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு மூலம் ஏற்கனவே டெங்குவை ஒழித்த அனுபவம் நம்மிடம் உள்ளது. ஆகவே, கொரோனா வைரசை அழிப்பதற்கும் தடுத்து நிறுத்துவதற்குமான மருந்து சித்த வைத்தியத்தில் நிச்சயம் உண்டு. அதனால், நம் மண்ணையும், மனிதகுலத்தையும் காப்பாற்றும் வகையில் சித்த மருத்துவத்தையும், பாரம்பரிய விவசாயத்தையும் மீட்டெடுத்து, ஆரோக்கியத்துடனும் செல்வத்துடனும் மனிதகுலம் வாழ்வதற்கு வழி காட்டும் நல்வாய்ப்பை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி, வெற்றியடைய அன்புடன் வாழ்த்துகிறேன்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page