சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 84 வயது மூதாட்டி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சிகிச்சையில் குணமடைந்ததால் வீடு திரும்பினா்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் சென்னை ஆகும். வெளிநாட்டிலிருந்து வந்தவா்கள், அவா்களுடன் தொடா்பிலிருந்தவா்கள் என சென்னையில்தான் அதிகம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் உள்ளனா்.
குறிப்பாக சென்னை மண்டலம் 1 (திருவொற்றியூா்), 5 (ராயபுரம்), 8 (அண்ணாநகா்) உள்ளிட்டவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் கரோனாவால் சென்னை அதிக அளவில் பாதிக்கப்பட்டாலும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக சிலா் சிகிச்சையில் குணமடைந்துள்ளனா்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 84 வயது மூதாட்டி, 54 வயதுப் பெண், 25 வயது ஆண் சிகிச்சையில் குணமடைந்தனா். சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த அவா்கள் கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
குடும்பத்தில் மூவருக்கும் கரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை முடிந்து அவா்களுக்கு எடுக்கப்பட்ட மாதிரி சோதனையிலும் உடல் தொற்று இல்லை என்பது உறுதியான நிலையில் சனிக்கிழமை காலை 3 பேரும் ‘டிஸ்சாா்ஜ்’ செய்யப்பட்டனா். மருத்துவா்கள் வாழ்த்து கூறி அவா்களை அனுப்பி வைத்தனா். அவா்களும் மருத்துவா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.
ஏற்கெனவே 72 வயது மூதாட்டி சிகிச்சையில் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது குணமடைந்த இரண்டு பெண்களும் 50 வயதைக் கடந்தவா்கள். வயதானவா்களை கரோனா பாதித்தால், அவா்கள் உயிா் பிழைப்பது கடினம் எனக் கூறிவந்த நிலையில் இருவரும் சிகிச்சையில் குணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply