பெர்லின்: உலக நாடுகள் கண்டறிந்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுகள் எண்ணிக்கை வெறும் 6% தான் என்றும், உலகளவில் தொற்று ஏற்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை கோடிகளை தாண்டும் என ஜெர்மன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அதிர்ச்சி ஊட்டுகின்றனர்.
இன்றைய (ஏப்.,10) நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்துள்ளது. 3.5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில், ‘லான்செட் தொற்றுநோய்கள்’ என்ற மருத்துவ சஞ்சிகையில் வந்த தகவல்களை ஆராய்ந்து, ஜெர்மனியின் காட்டிங்ஜென் பல்கலைக்கழக ஆய்வாளர்களான கிறிஸ்டியன் பாமர் மற்றும் செபாஸ்டியன் வால்மர் ஆகியோர் புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். உலக நாடுகள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை கொண்டு, கொரோனா வைரஸ் இறப்புகளையும், ஒருவருக்கு நொய் தொற்று உண்டாகி, அவர் இறக்க எவ்வளவு காலம் ஆனது என்பதையும் வைத்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.
அதன்படி, உலகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில், சராசரியாக 6% பேரை மட்டுமே கண்டறிந்துள்ளதாகவும், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை கோடியை தாண்டியிருக்கும் என்கின்றனர். அரசு தங்களிடம் உள்ள இந்த எண்ணிக்கையை வைத்து திட்டமிடும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பரிசோதனைகளின் தரம் மற்றும் எண்ணிக்கையில் இருக்கும் வேறுபாடுகள், அதிகாரப்பூர்வ பதிவுகள் பயனுள்ள தகவலை வழங்காததையே காட்டுவதாக எச்சரிக்கின்றனர்.
இவர்களது மார்ச் 31, 2020 மதிப்பீட்டின் படி, ஜெர்மனியில் 4.6 லட்சம் பேரும், அமெரிக்காவில் ஒரு கோடிக்கு அதிகமானோரும், ஸ்பெயினில் 50 லட்சம், இத்தாலியில் 30 லட்சம், இங்கிலாந்தில் 20 லட்சம் பேருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என்கிறது. அதே நாளில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை., 9 லட்சம் பேருக்கு உலகளவில் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அளித்தது. பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். புதிய தொற்றுகளை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி, அவர்கள் தொடர்புகொண்ட நபர்களையும் கண்டுபிடிக்க வேண்டும். பரிசோதனைகளை தாமதப்படுத்தியதால் தான் இத்தாலியும், ஸ்பெயினும் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தது என அறிக்கையில் கூறியுள்ளனர்.
Leave a Reply