கோவை மாவட்டத்தில் 4 லட்சம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
கோவை:
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 60 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்த 230 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. இதையொட்டி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இருந்த குடியிருப்புகளில் சுகாதார ஊழியர்கள் சோதனை நடத்தி தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் வீடுகளில் சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். அப்போது அவர்கள், காய்ச்சல், தொண்டை வலி போன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ளதா? என்று கேட்டு மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்கள்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் நோய் அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு வசிக்கும் 4 லட்சம் பேருக்கு காய்ச்சல் உள்ளதா? என்று பரிசோதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதோடு அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருக்கிறதா? என்று கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 2,225 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வார்டு அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்ளுக்கு வைரஸ் பரவல் தடுப்பு ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.
Leave a Reply