ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை இஸ்ரேலுக்கு அனுப்பியதற்கு நன்றி நண்பரே என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜெருசலேம்:
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இஸ்ரேலிலும் பரவி வருகிறது. அந்நாட்டில் 9 ஆயிரத்து 968 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, இந்தியாவில் மலேரியா நோய்க்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்பட்டுவரும் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் எனப்படும் மருந்து கொரோனா வைரசை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனால், இந்தவகை மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.
ஆனால், ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கவில்லை என்றால் தக்க பதிலடி தரப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடும் நோக்கில் கூறினார்.
டிரம்ப் பேசிய சில மணி நேரத்திலேயே இந்தியா ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய விதித்த தடையை நீக்கியது.
ஹைட்ரோக்சிகுளோரோகுயின்
இதற்கிடையே, குளோரோகுயின் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை இஸ்ரேல் நாட்டிற்கு அனுப்புமாறு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் இஸ்ரேல் நாட்டிற்கு குளோரோகுயின் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நேற்று இஸ்ரேலை சென்றடைந்தது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நெதன்யாகு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” இஸ்ரேலுக்கு குளோரோகுயின் மருந்துகளை அனுப்பிய எனது அருமை நண்பர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இஸ்ரேல் நாட்டின் அனைத்து குடிமக்கள் சார்பாகவும் நன்றி’’ என தெரிவித்துள்ளார்.
Leave a Reply