இங்கிலாந்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு இந்திய டாக்டர் பலியானார். ஆபத்தான நிலையில் இருக்கும் மேலும் 5 டாக்டர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டில், தேசிய சுகாதார பணியில் சுமார் 65 ஆயிரம் இந்திய டாக்டர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள்.
இங்கிலாந்தில் கொரோனா தாக்குதல் அதிகமாக இருக்கும் நிலையில், அங்கு இந்திய டாக்டர்கள் முன்னணியில் நின்று களப் பணியாற்றி வருகிறார்கள்.
இதற்கிடையே அங்கு 2 நாட்களுக்கு முன்பு டாக்டர் ஜிதேந்திர ரோதட் என்பவர் கொரோனா தாக்குதலால் உயிர் இழந்தார்.
58 வயதான அவர் இருதய அறுவைச் சிகிச்சை மருத்துவர். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். மும்பையில் உள்ள அரசு கிராண்ட் மருத்துவ கல்லூரியில் பயிற்சி பெற்றவர். 25 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்து சென்ற அவர், இறுதியாக வேல்ஸ் ஹாட்ரிப் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றினார்.
இப்போது இன்னொரு டாக்டரும் பலியாகி இருக்கிறார்.
அவரது பெயர் டாக்டர் கம்சா பச்சேரி. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெற்றவர். 80 வயதான அவர் லண்டனிலுள்ள பிர்மிங்கம் என்னுமிடத்தில் வசித்து வந்தார்.
இவர்கள் தவிர மேலும் 5 டாக்டர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட தகவலை இங்கிலாந்தில் உள்ள இந்திய டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரமேஷ் மேத்தா தெரிவித்தார். “இதுவரை உறுதியாக தெரிந்தவர்கள் 5 பேர்தான் இன்னும் பலர் இருக்கக்கூடும்” என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.
கொரோனா தாக்கியவர்கள் மத்தியில் டாக்டர்கள், களப் பணியாற்றச் செல்வது, போருக்கு புறப்பட்டு செல்வது போன்றுதான் இருக்கிறது.
இதை அறிந்தே இந்திய டாக்டர்கள் மனிதநேய அர்ப்பணிப்புடனும் தியாக மனப்பான்மையுடனும் பணியாற்ற விரும்பியே, இங்கிலாந்தின் தேசிய சுகாதார பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் டாக்டர் ரமேஷ் மேத்தா தெரிவித்தார்.
Leave a Reply