போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்று இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
லண்டன்,
போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்று இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. இங்கிலாந்தில் 55 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் கடந்த 5-ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமடைந்ததால், மறுநாள், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. “கொரோனா அறிகுறி மோசமடைந்ததால், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். ஆனால், அவர் நல்ல மனஉறுதியுடன் உள்ளார்” என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் பொறுப்பை கவனிக்கும் வெளியுறவு மந்திரி டொமினிக் ராப் கூறியதாவது:- போரிஸ் ஜான்சன் இயல்பாக சுவாசிக்கிறார். அவர் நோயை வென்று வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவர் ஒரு போராளி. விரைவில் குணமடைந்து, மீண்டும் தலைமை பொறுப்பேற்று, இந்த சிக்கலான தருணத்தில் எங்களை வழிநடத்துவார்.இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply