கொரோனா வைரஸ் பாதிப்பால் ரெயில்கள் சரக்குகளை ஏற்றிச்செல்வதற்கான வருமானம் ரூ.2,125 கோடி அளவுக்கு குறைந்து விட்டது.
புதுடெல்லி,
உலக நாடுகளை கதிகலங்க வைத்து வரும் கொரோனா வைரஸ், நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தீவிரமாக பரவி வருகிற இந்த வைரசை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளதால் அனைத்து தொழில் நடவடிக்கைகளும் முடங்கி உள்ளன. பொருளாதாரம் நிலை குலைந்துபோய் உள்ளது. இது ரெயில்வே துறையிலும், அதுவும் சரக்கு கையாளுதல் துறையிலும் எதிரொலித்துள்ளது. பிப்ரவரி மாத நிலவரப்படி, 2019-20 நிதி ஆண்டின் செயல்பாடுகளை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், ரெயில்களில் 15.7 மில்லியன் டன் சரக்கு குறைவாகவே ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் ரெயில்வே சரக்குகளை ஏற்றும் நடவடிக்கை, வெகுவாக பாதித்துள்ளது. 2018-19-ம் நிதி ஆண்டில் சரக்குகளை ஏற்றிச் சென்றதன் மூலம் ரெயில்வேயுக்கு கிடைத்த வருமானம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 354 கோடி ஆகும். இது 2019-20-ம் நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 225 கோடியாக குறைந்துள்ளது. அதாவது ரூ. 2,129 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு காரணமாக புறநகர் ரெயில் சேவை உள்பட அனைத்து பயணிகள் ரெயில் சேவையும் வரும் 14-ந்தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுவும் பெருத்த நிதி இழப்புக்கு காரணமாகி உள்ளது. மார்ச் மாதத்தில் ரெயில்கள் சரக்குகளை ஏற்றிச்செல்வது 3 சதவீதம் குறைந்துள்ளது. கட்டுமானப்பணிகள் நடக்காததால் சிமெண்டு, இரும்பு ஏற்றிச்செல்லும் அவசியம் எழவில்லை. நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்கள் தேவையும் இல்லாமல் போய்விட்டது. ஒரு அதிகாரி இதுபற்றி கூறுகையில், “சரக்குகளை ஏற்றி இறக்கவும் தொழிலாளர்கள் கிடைக்காமல் போயினர். எனவே எல்லா வணிகங்களையும் போல ரெயில்வே சரக்கு ஏற்றிச்செல்வதும் குறைந்து விட்டது” என்று குறிப்பிட்டார். 1974-ம் ஆண்டு ரெயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் 54 நாட்கள் பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின்னர் நீண்டகாலமாக பணிகள் நிறுத்தப்பட்டிருப்பது ரெயில்வேயில் இதுவே முதல் முறை ஆகும்.
Leave a Reply