ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக எல்லை பாதுகாப்பு படையினர், வருகிற 21-ந் தேதிக்கு முன்னதாக எங்கும் நகர வேண்டாம் என்று அதிரடி உத்தரவு போடப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமல் : 21-ந் தேதிக்கு முன்பாக எங்கும் நகர வேண்டாம் – எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிரடி உத்தரவு
எல்லை பாதுகாப்பு படை
புதுடெல்லி:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்கும் வகையில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவு, 14-ந் தேதி முடிய உள்ளது. இதை நீட்டிக்க வேண்டும் என்ற பல்வேறு மாநிலங்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த தருணத்தில் 21-ந் தேதி முன்பாக எல்லை பாதுகாப்பு படையினர் எங்கும் நகரக்கூடாது, அவர்கள் இருக்கிற இடத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விடுமுறையில் சென்று ஏப்ரல் முதல் வாரம் பணியில் திரும்ப இருந்தவர்கள், வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அவர்களது விடுமுறையும் 21-ந் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு படையின் பயிற்சி மையங்களுக்கும் இதே போன்றதொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு பயிற்சி நடைபெற்று வந்து, வரும் நாட்களில் நிறைவு பெற இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக அந்த படையின் செய்தி தொடர்பாளர் சுபேந்து பரத்வாஜ் தெரிவித்தார். தகவல் தொடர்பில் தவறு நேர்ந்து விடக்கூடாது என்பதால் தொலைபேசி மூலமும் இது தொடர்பான உத்தரவுகள் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
குவாலியரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை பயிற்சி அகாடமியில் பணியாற்றி வந்த 57 வயதான ஒரு அதிகாரிக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது கடந்த மாதம் 28-ந் தேதி உறுதியானது. இங்கிலாந்து நாட்டில் இருந்து சமீபத்தில் திரும்பிய அவரது குடும்ப உறுப்பினர் மூலம் அவருக்கு பரவியது தெரியவந்தது, அவர் உடனடியாக உள்ளூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த படையினர் சுமார் 25 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply