Spread the love

கேரளாவில் நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கொரோனா பாதிப்புகளால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

திருச்சூர்

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழா உலக புகழ்பெற்றது. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இத்திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்.

இந்தாண்டுக்கான விழாவை மே 3-ம் தேதி கொண்டாட திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் திருவிழாக்கள், கோயில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு திருவிழாவில் வெறும் பூஜைகள் மட்டு்ம் நடத்த தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

பூரம் கண்காட்சி ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 2 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் திருவிழாவும் ரத்தாகியுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா-சீனா போரின் போது இந்த திருவிழா ரத்து செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் ஆரட்டுபுழா கோயிலில் திருச்சூர் பூரம் திருவிழா ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழாவில், திருச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட கோயில்கள் கலந்து கொள்ளும். யானைகள் அணிவகுப்பு நிகழ்ச்சி, கண்கொள்ளகாட்சி ஆகும்.

1798ம் ஆண்டு, திருச்சூர் உள்ளடக்கிய மத்திய கேரளா பகுதி, சக்தான் தம்புரான் தலைமையிலான கொச்சி ராஜ்யத்தின் கீழ் இருந்தது. அப்போது நடைபெற்ற ஆராட்டுபுழா பூரம் விழாவில், பலத்த மழையின் காரணமாக, சில கோயில்கள் தாமதமாக பங்கேற்க வந்தன. தாமதமாக வந்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த கோயிலின் பிரதிநிதிகள் சக்தான் தம்புரானிடம் முறையிட்டனர்.

இதற்கு தீர்வு என்பது, திருச்சூரிலேயே பூரம் விழாவை நடத்துவது என்று சக்தான் தம்புரான் முடிவெடுத்து அதற்கு செயல்வடிவமும் கொடுத்தார்.பல நூற்றாண்டுகளை கடந்து இன்றும் திருச்சூர் பூரம் விழா, அதே உற்சாகத்துடனும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் உள்ளூர், உள்நாட்டு மக்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டினரும் அதிகளவில் கலந்துகொள்கின்றனர்.

பூரம் திருவிழாவிற்கு ஏழுநாட்களுக்கு முன்னர் பரமேக்காவு பகவதி கோயில் மற்றும் திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் கோயில்களில் பூரம் திருவிழா கொடியேற்றம் நடைபெறும். பூரம் திருவிழா அன்று 20க்கும் மேற்பட்ட கோயில்களிலிருந்து விக்கிரகங்கள் அணிவகுத்து வந்து திருச்சூர் வடக்கும்நாதன் கோயிலில் கூடும். அந்த நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கானோர் கோயில் வளாகத்தில் குழுமியிருப்பர்.

திருச்சூர் பூரம் திருவிழா இந்து திருவிழா என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடங்கிவிடாமல் சமய மத சார்பற்ற திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறித்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள், திருச்சூர் பூரம் திருவிழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

திருச்சூர் பூரம் திருவிழாவின் மற்றொரு முக்கியமான அம்சம் யாதெனில், செண்டை, மத்தாளம், எடக்கா, திமிலா மற்றும் கொம்பு உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகள் இசைக்கப்படுவது ஆகும். பஞ்சவாத்தியம் அல்லது பஞ்சரிமேளம் அடிப்படையிலான இசை நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் இசைநிகழ்ச்சி, பார்க்கும் அனவரையும் மெய்மறக்க செய்துவிடும்.

வடக்கும்நாதன் கோயிலின் முன் இலஞ்சிதாரா மேள வாத்தியம் இசைக்கப்படுவது முக்கியமான நிகழ்வாகும். இந்த இசை நிகழ்ச்சியை, பெருவனம் குட்டன் மரார், மூன்று தலைமுறைக்கும் மேலாக அரங்கேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

100க்கும் மேற்பட்ட யானைகளின் அணிவகுப்பை காணவே, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இந்த திருவிழாவிற்கு வருகை தருகின்றனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் 30 யானைகளும் மற்ற சிறுசிறு நிகழ்வுகளில் 70 யானைகளும் பங்கேற்கின்றன.

யானைகள் தங்கள் முகப்பகுதியில் அணியும் தங்க ஜரிகைகளால் ஆன நெற்பட்டம், மயிலிறகுகளாலான ஆலவட்டம், எருதின் முடிகளால் ஆன வெஞ்சாமரம், முத்துகளால் தொகுக்கப்படும் முத்துகுடா இவைகள் யாவும் யானைகளின் மீது அமரும் அம்பாரிகளால் பார்வைக்கு வைக்கப்படும். இந்த கலைநயமிக்க ஆபரணங்கள் யாவும் பரமேக்காவு மற்றும் திருவெம்பாடி கோயில்களில் வடிவமைக்கப்படுகின்றன.

பூரம் திருவிழாவில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்படுகின்றன. கொடியேற்றம் நடந்து நான்காம் நாளில் சாம்பிள் வெடிகட்டு என்ற பெயரில் சிறிய அளவில் வாணவேடிக்கையும், பூரம் திருநாளின் மாலைநேரத்தில் பிரமாண்ட அளவிலான வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

இந்த வாணவேடிக்கைகளால், அதிகளவு ஒலி மற்றும் காற்று மாசுபடுவதாக சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் போதிலும், ஆண்டிற்கு ஆண்டு வாணவேடிக்கைகளின் அளவு அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. பரமேக்காவு மற்றும் திருவம்பாடி கோயில் நிர்வாகங்கள் ஆண்டுதோறும் போட்டி போட்டுக்கொண்டு வாணவேடிக்கைகளை பிரமாண்ட அளவில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page