2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.

மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகின்றன. இதேபோல் தொழில் துறையினருக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். குறிப்பாக கடன் வசூலிக்க தடை, வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும்பொழுது, கொரோனாவால் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை ரிசிர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. பொருளாதார இழப்புகள் தொடர்பாக பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களிடம் கருத்தை கேட்டறிந்துள்ளோம். கொரோனா வைரசுக்கு எதிரான போருக்கு ரிசர்வ் வங்கி முழுமையாக தயாராகி உள்ளது.

வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது. இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய பொருளாதார சவால். உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) கடந்த 14ந்தேதி, தனது உலகளாவிய வளர்ச்சி கணிப்புகளை வெளியிட்டது. 2020 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் பெரும் மந்தநிலைக்கு பின்னர் மிக மோசமான மந்தநிலைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நிதியம் இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது.

கொரோனா எதிரொலியாக நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்ற தன்மையே நிலவுகிறது. மார்ச் மாதம் வாகன உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது.

2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை மற்றும் ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு இருக்காது. உலகிலேயே ஜி.டி.பி. வளர்ச்சி அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஜி20 நாடுகளிலேயே அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது என அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *