சில தொழில் நடவடிக்கைகளுக்கு 20-ந் தேதியில் இருந்து அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா தொற்று தொடர்பான ஊரடங்கை மே 3-ந் தேதிவரை நீட்டித்ததோடு, சில தொழில்களுக்கான கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் செய்து வழிகாட்டி நெறிமுறைகளை கொண்டு வந்து மத்திய அரசு உத்தரவிட்டது.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் சில கூடுதல் நடவடிக்கைகளை 20-ந் தேதியில் இருந்து அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் கட்டுப்பாடுகளோடுதான் இவை அனுமதிக்கப்படுகின்றன.
வேலையிடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். ஆனால் மாநில அரசுகளால் கட்டுப்பாட்டுப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட மண்டலங்களில் இந்த திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் அமலாக்கப்படாது.
திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி சில நடவடிக்கைகளுக்கு அனுமதி பெற்றிருக்கும் பகுதி எதுவும் புதிதாக கட்டுப்பாட்டு மண்டலத்துக்குள் கொண்டு வரப்பட்டால், அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுவிடும்.
மத்திய அரசு பிறப்பித்துள்ள இந்த திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுவதோடு, தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கை மே 3-ந் தேதி வரை நீட்டித்தும் தமிழக அரசு ஆணை பிறப்பிக்கிறது. ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply