இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 நாளில் இருமடங்கு ஆனது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துவிட்டது.
புதுடெல்லி,
சீனாவில் உருவான ஆட்கொல்லி வைரசான கொரோனா தனது கோரப்பார்வையை இந்தியா பக்கமும் திருப்பியது. இதனால் அந்த வைரசிடம் இருந்து மக்களை காக்க தனிமைப்படுத்துதலே அவசியம் என்பதால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தநிலையில், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக் கப்படுவதாக அறிவித்தார்.
அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும் கொரோனா தனது கோர கரங்களை விரித்து பலரது உடல்களில் தொற்றி வருகிறது. இந்தியாவில் கடந்த 8-ந் தேதி வரை இந்த வைரசால் 5,274 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. அதன்படி பார்த்தால் இந்தியாவில் 6 நாளில் கொரோனா பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரப்படி, நாட்டில் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டவர் கள் எண்ணிக்கை 1,463 ஆகும். இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,815 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9,272 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும், 1,189 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 76 பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொடிய கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி புதிதாக 29 பேர் இறந்துள்ளதால், பலியானவர்களின் எண்ணிக்கை 353 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக தொடர்ந்து மராட்டியம் இருந்து வருகிறது. 24 மணி நேரத்துக்குள் புதிதாக பலியான 29 பேரில், 11 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அடுத்த படியாக மத்திய பிரதேசத்தில் 7 பேரும், டெல்லியில் 4 பேரும், கர்நாடகாவில் 3 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 2 பேரும், பஞ்சாப் மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,400-ஐ கடந்துள்ளது. டெல்லியில் 1,500-க்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது. அண்டை மாநிலமான கேரளாவிலும் புதிதாக 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply