வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் தேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்ப முடியாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். கோவா மாநிலத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
அதேபோன்று, கேரள மாநிலம் கண்ணூர், காசர்கோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள், ஊரடங்கு காரணமாக வேலைகளை இழந்து தவிக்கின்றனர். கடந்த 10 நாட்களாகவே வேலை இல்லாத நிலையில், இதுவரை வேலைசெய்து ஈட்டிய பணத்தை, தங்களின் உணவு மற்றும் இதர வாழ்வாதார தேவைகளுக்காக செலவழித்து விட்டனர். இப்போது உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு கூட பணமின்றி, பட்டினியில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும், அந்தமானிலும் ஏராளமான தமிழர்கள் தவித்துக் கொண்டிருகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதே அரசுக்கு பெரும் பணியாக இருக்கும் போதிலும், அண்டை மாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.
எனவே, கேரளம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தவிக்கும் தமிழர்கள் இப்போது உள்ள அதேபகுதியில் உணவு உள்ளிட்ட வசதிகளுடன் கண்ணியமாக வாழ்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்காக அம்மாநில அரசுகளுடன் தமிழக அரசு பேச வேண்டும்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் 3-வது கட்டமான சமூகப் பரவலாக மாறி விடக்கூடாது. அதற்கு முன் அதைக் கட்டுப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் 10 மாவட்டங்களில், பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடத்தைச் சுற்றி 8 கி.மீ. சுற்றளவில் உள்ள அனைத்து வீடுகளிலும் கொரோனா ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்தும், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள அனைவரையும் முதலில் தனிமைப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கு கொரோனா ஆய்வு மேற்கொண்டு நோய் பரவலைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply