சென்னை,
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விவசாய பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாய பொருட்கள் கொள்முதல் நிறுவனங்கள், விவசாய விளைபொருட்கள் மார்க்கெட் கமிட்டி நடத்தும் மண்டிகள் செயல்பட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. அதேபோல உர விற்பனை நிலையங்கள், விவசாய பணிகள் மற்றும் விவசாய கூலிப்பணி, விவசாய எந்திரங்கள் வாடகை மையங்கள், உரம், விதைகள், பூச்சிக்கொல்லி தயாரிப்பு மற்றும் பேக்கிங் நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும். மாநிலம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த எந்திரங்களின் இயக்கத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்படுகிறது. இந்த பணிகளை தொடரலாம்.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் தருணத்தில் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிற்பகல் 2.30 மணிகளுக்கு மேல் கடைகள் இயங்காது. அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை மீறினால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Leave a Reply