இந்திய வங்கிகளிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடிக்கு அதிகமாக கடன் வாங்கி விட்டு திருப்பிச்செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிய விஜய் மல்லையாவுக்கு திவால் நடவடிக்கையில் இருந்து நிவாரணம் வழங்கி லண்டன் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
லண்டன்,
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 64). கிங் பிஷர் குழும நிறுவனங்களின் தலைவரான இவர், இந்திய ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகளில் 1.145 பில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.10 ஆயிரத்து 830 கோடி) கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்று விட்டார்.
இது தொடர்பாக அவர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் இந்திய கோர்ட்டுகளில் வழக்குகள் தாக்கல் செய்து அவை நிலுவையில் உள்ளன. இவர் தேடப்படும் குற்றவாளியாக சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக கடன் தொகையை வட்டியுடன் வசூலிக்க ஏதுவாக விஜய் மல்லையா மீது 12 பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பு, லண்டனில் உள்ள தலைமை திவால் நடவடிக்கை மற்றும் கம்பெனி கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளன. இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வங்கிகள் கூட்டமைப்பின் சார்பில் வாதிடுகையில், “விஜய் மல்லையாவிடம் இருந்து தங்களுக்கு கொடுக்க வேண்டியதைப் பெறுவதற்கு, திவால் உத்தரவு தேவைப்படுகிறது” என வாதிடப்பட்டது.
மேலும் விஜய் மல்லையாவுக்கு, பிரான்சில் ஒரு மாளிகை, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் நிறைய சொத்துகள், கரீபியன் நாடான செயிண்ட் கிட்ஸ் நெவிசில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை மற்றும் உலகளாவிய சொத்துகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
விஜய் மல்லையா சார்பில் வழக்கை மறுத்து வாதிடுகையில், திவால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. மேலும், விஜய் மல்லையாவை இந்தியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள வங்கிகள் நியாயமற்ற முறையில் பின் தொடர்வதாகவும் கூறப்பட்டது.
அத்துடன், இந்திய அமலாக்கத்துறையின் தலையீட்டால், பணம் செலுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது, பணம் செலுத்தாததற்காக விஜய் மல்லையா மீது வங்கிகள் திவால் அனுமதி கோருகின்றன; ஆனால் அவர் பணத்தை திரும்ப செலுத்த முடியாதபடிக்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர் எனவும் வாதிடப்பட்டது. விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள விஜய் மல்லையாவின் எல்லா மனுக்கள் மீதும், கர்நாடக ஐகோர்ட்டில் உள்ள அவரது கடன் தீர்வு மனுக்கள் மீதும் முடிவு எடுத்து, அவர் கடன்களை திரும்ப செலுத்துவதற்கு அவகாசம் அளிக்கும்வகையில் நிவாரணம் வழங்கி நீதிபதி மைக்கேல் பிரிக்ஸ் தீர்ப்பு அளித்தார். இதன் மூலம் திவால் நடவடிக்கையில் இருந்து விஜய் மல்லையா தப்பி உள்ளார்.
இந்த வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* இந்த திவால் வழக்கு, எந்த வகையிலும் அசாதாரணமானது.
* இந்தியாவில் நடவடிக்கைகள் எடுக்கிறபோதே திவால் நடவடிக்கை கோரப்பட்டுள்ளது.
* இந்த தருணத்தில், இந்த திவால் நடவடிக்கையை எடுப்பதற்கு வங்கிகளுக்கு வெளிப்படையான நன்மை ஏதும் இல்லை.
* இந்தியாவில் விஜய் மல்லையா தொடர்ந்துள்ள வழக்குகளின் வெற்றிக்கு நியாயமான வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இது விஜய் மல்லையாவுக்கு பெருத்த நிம்மதியை அளித்துள்ளது.
Leave a Reply