வாஷிங்டன்: ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்யவில்லை எனில் அதற்கான விளைவை இந்தியா சந்திக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், தற்போது, மோடி கிரேட், ரியலி குட் என பாராட்டியுள்ளார்.
உலகளவில் 70 சதவீத ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து உற்பத்தி இந்தியாவில் தான் செய்யப்படுகிறது. இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது. மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியுமா என்று வல்லுநர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஐ.சி.எம்.ஆர், இந்த மருந்தை கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் சுகாதாரத் துறை ஊழியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.
மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை கொரோனாவுக்கு பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பரிந்துரைத்தது. அது நல்ல பலனை அளித்து வருவதால் அதையே அமெரிக்காவிலும் பயன்படுத்தலாம் என அமெரிக்க உணவு மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு FDA அறிவித்தது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளதால் உடனடியாக அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பி வைக்கும்படி பிரதமர் மோடியிடம் அதிபர் ட்ரம்ப் கேட்டார். நம்நாட்டவருக்கு தேவைப்படும் என்பதால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை போட்டது. உடனே இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என ட்ரம்ப் கூறினார். இதையடுத்து, மனித நேய அடிப்படையில் அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ‛இந்தியாவிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை ஆர்டர் செய்துள்ளோம். அவர்கள் இன்னும் மறுக்கவில்லை. ஆனால், இந்தியா மருந்தை ஏற்றுமதி செய்யவில்லை எனில் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும்,’ என பேசியிருந்தார். டிரம்பின் இந்த மிரட்டலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, அமெரிக்காவுக்கு மருந்து ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. குஜராத்திலிருந்து அமெரிக்காவுக்கு, இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து, 29 மில்லியன் டோஸ்களில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், தற்போது பிரதமர் மோடியை, டிரம்ப் பாராட்டி பேசியுள்ளார். பாக்ஸ் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: ‛‛ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தின் 29 மில்லியன் டோஸ்களுக்கு மேல் வாங்கப்பட்டுள்ளன. இதுபற்றி நான் மோடியிடம் பேசினேன். அவரிடம் இந்த மருந்தை அனுப்பச் சொல்லிக் கேட்டேன். அவர் கிரேட். அவர் ரியலி குட்.” இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
Leave a Reply