மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பித்த மேயரை போதைப்பொருள் கும்பல் சுட்டுக் கொன்றது.
மெக்சிகோ சிட்டி,
கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக அமெரிக்க உள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நோக்கி நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது.
அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகிறது. அந்த நாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அமெரிக்காவில் இருந்து யாரையும் மெக்சிகோவுக்குள் அனுமதிக்கக்கூடாது என கூறி அந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, அமெரிக்காவுடனான எல்லைகளை மெக்சிகோ மூடியது.
எனினும் மெக்சிகோவின் சில எல்லையோர நகரங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசும், அந்தந்த மாகாண அரசுகளும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் அந்த நாட்டின் தெற்கு மாகாணமான குயின்டானரூவில் உள்ள மகஹூல் நகர மேயர் ஓபிட் துரோன் கோமஸ், தனது நகரில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.
அந்த நகரில் வாகன போக்குவரத்து முடக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
இதனிடையே மகஹூல் நகரில் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டதால் அந்த நகரை சேர்ந்த போதைப்பொருள் கும்பல்கள் பிற நகரங்களுக்கு போதைப்பொருளை கடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் போக்குவரத்து தடையை உடனடியாக நீக்கும்படி மேயர் ஓபிட் துரோன் கோமசுக்கு போதைப்பொருள் கும்பல்கள் கொலை மிரட்டல் விடுத்தன. ஆனால் ஓபிட் துரோன் கோமஸ் அதனை பொருட்படுத்தவில்லை.
இந்தநிலையில் ஊரடங்கின் நிலைமை குறித்து கண்காணிப்பதற்காக மேயர் ஓபிட் துரோன் கோமஸ் மினிபஸ் ஒன்றில் பயணம் செய்தார். இதனை அறிந்த போதைப்பொருள் கும்பல் ஒன்று, காரில் வந்து மினிபஸ்சை வழிமறித்தனர்.
பின்னர் அந்த கும்பல் ஓபிட் துரோன் கோமசை மினிபஸ்சில் இருந்து இறக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை உடனிருந்த அதிகாரிகள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மக்களின் நலனுக்காக ஊரடங்கு பிறப்பித்த மேயரை போதைப்பொருள் கும்பல் சுட்டுக் கொன்ற சம்பவம் மெக்சிகோவில் பெரும் அதிர்ச்சியை ஏற்பத்தி உள்ளது.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்த நாட்டின் அதிபர் லோபஸ் ஒப்ரடோர் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார்.
Leave a Reply