” கரோனா என்னும் மூன்றாம் உலகப்போரை எதிர்த்து நடக்கும் இந்த யுத்தத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் காப்பீடு வரவேற்கத்தக்கது. பணியின்போது அவர்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். ”
கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பது எப்படி? இந்நோய்க்கு எப்படி வைத்தியம் செய்வது? இதனால் எவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படப் போகின்றன என்பதையெல்லாம் அறிய முடியாமல் மிகப் பெரிய கலக்கத்திலும், பேரச்சத்திலும் மக்கள் ஆழ்ந்திருக்கிற நேரமிது.
ஏற்கெனவே, கரோனா நோய்த்தொற்று 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்ட நிலையில், உலகம் முழுவதும் 6 லட்சத்து 68 ஆயிரத்து 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31,000-த்துக்கும் மேற்பட்டோர் உலகெங்கும் உயிரிழந்துள்ளனர். மருத்துவ வல்லுநர்கள் இந்த நோயை எப்படி எதிர்கொள்வது என்பதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.
ஸ்வைன் ப்ளூ, சார்ஸ், இன்ப்ளூயன்சா போன்று இதுவும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுதான் என்றாலும், அவற்றுக்கும், கரோனா நோய்த்தொற்றுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது.
மற்ற வைரஸ்கள் இருமல், தும்மல் போன்றவற்றாலும், நுண்துகள்களாலும் பரவும். ஆனால், கரோனா நோய்த்தொற்றானது, நுண்துகள்களால் மட்டுமல்லாது, இந்த நோய்த்தொற்று உள்ளவர்கள் தொடும் பொருள்கள், இடங்களை மற்றவர்கள் தொடும்போது அவர்களுக்கும் எளிதில் பரவக் கூடியது. மேலும், மற்ற வைரஸ்கள் போலல்லாமல், கற்பனையில் எட்ட முடியாத அளவுக்குப் பல மடங்கு வேகமாகப் பரவும் தன்மையுடன், பல மடங்கு உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்தக் கூடியது இந்த கரோனா நோய்த்தொற்று.
கடந்த ஜனவரி 7-ஆம் தேதிதான் தனது நாட்டில் ஒருவிதமான நிமோனியா தாக்கம் ஏற்பட்டிருப்பதையும், அது கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டதையும் உலக சுகாதார நிறுவனத்திடம் சீன அரசு தெரிவித்தது. கரோனா நோய்த்தொற்று அவசர நிலையை கடந்த ஜனவரி 30-ஆம் தேதியன்று உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியது.
அதையடுத்து, சீனா, இத்தாலி, ஈரான், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இந்த நோய் பரவி, அங்கு ஏற்படுத்திய மோசமான தாக்கத்தையும், உயிரிழப்புகளையும் கண்ட நமது இந்திய அரசு, கரோனா பாதிப்பிலிருந்து நம்மைக் காக்கும் நடவடிக்கைகளைப் பெரும் யுத்தமாக மாற்றியுள்ளது.
ஆய்வுக் கணக்கின்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து அந்த நோயானது 5 நாள்களில் மேலும் 3 பேருக்குப் பரவும். 30 நாள்களில் அதுவே 406 பேருக்குப் பரவும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கடுமையான இருமலும், 90 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், 70 சதவீதம் பேருக்கு மூச்சுத்திணறலும், 50 சதவீதம் பேருக்கு தொண்டை வலியும், 40 சதவீதம் பேருக்கு உடல் வலியும் ஏற்பட்டுள்ளன. இவை தவிர மூக்கில் சளி வடிதல், உடல் சோர்வு, தலைவலி முதலான பிரச்னைகளும் ஏற்படும்.
இந்த அறிகுறிகள், நோய்த்தொற்று ஏற்படும் முதல் 4 அல்லது 5 நாள்கள் மெதுவாக வரத் தொடங்கும். அப்போதே மருத்துவரிடம் தொலைபேசியில் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. 3 முதல் 4 நாள்களுக்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் கரோனா நோய்த்தொற்றுக்கு உண்டான பரிசோதனைகளைச் செய்துகொள்வது அவசியம்.
நோய்த்தொற்று பரவிய 7 நாள்களுக்குள் 20 சதவீதம் பேருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படும். அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். கரோனா நோய்த்தொற்றால் 1,000 பேர் பாதிக்கப்பட்டால், அதில் 20 முதல் 30 பேர் வரை உயிரிழக்கின்றனர். இதை நன்கு உணர்ந்ததால்தான், இந்திய அரசு, துணிந்து நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கை அறிவித்து, அனைத்துத் தரப்பு மக்களையும் நோய் தாக்காமல் காக்க போராடி வருகிறது.
நாடு தழுவிய ஊரடங்கு கரோனா நோய் பரவுவதை முற்றிலும் தடுக்காது என உலகச் சுகாதார நிறுவனம் கருதுகிறது. எனினும், 130 கோடி மக்கள்தொகை கொண்ட பெரிய நாடான இந்தியாவில், இதுபோன்ற கொடிய நோயை எதிர்கொள்ளும் அளவுக்கு போதிய மருத்துவமனைகள், படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையில், மருத்துவ உள்கட்டமைப்புகளையும், மருத்துவமனைகளையும் தயார்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த ஊரடங்கில் கிடைக்கும் அவகாசம் பயன்படும் என மருத்துவத் துறையினர் கூறுகின்றனர்.
தற்போது உள்ள நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு, நோயைக் கண்டறியும் பரிசோதனைகளை பல்லாயிரம் மடங்காக அதிகரித்தல், மருத்துவக் கட்டமைப்பையும், மருத்துவத் துறைகளையும் தயார்ப்படுத்துதல், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளையும் பயன்படுத்துதல், மருத்துவப் பரிசோதனைகளுக்கும், சிகிச்சைகளுக்கும் பெருமளவு நிதியை ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட 5 வழிகளில் இந்த நோய்த்தொற்று பரவாமல் இருக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
கரோனா நோய்த்தொற்று உள்ளவரைக் கண்டறிந்து, தனிமைப்படுத்துதல், மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருந்து சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளால்தான், தென்கொரியாவில் இந்நோய் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆயினும், நம் நாட்டில் இதுவரை 119 அரசு மற்றும் 35 தனியார் பரிசோதனை மையங்கள்தான் உள்ளன. இவை பல மடங்கு அதிகரிக்கப்பட்டால் மட்டுமே பல்லாயிரக்கணக்கான மக்களை தினமும் பரிசோதிக்க முடியும்.
கரோனா என்னும் மூன்றாம் உலகப்போரை எதிர்த்து நடக்கும் இந்த யுத்தத்தில் தம் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் காப்பீட்டுத் திட்டம் வரவேற்கத்தக்கது. எனினும், பணியின்போது அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.
மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், உடல் தகுதியுள்ள ஓய்வு பெற்ற மருத்துவர்களை தற்போதைய சூழலில் கரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடுபடுத்தலாம். தேவைப்பட்டால், இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து ஈடுபடுத்தலாம். வெளிநாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் படித்து, இந்தியாவில் நுழைவுத் தேர்வுக்காகக் காத்திருக்கும் மருத்துவர்களையும் பயிற்சிக்குப் பிறகு பயன்படுத்தலாம்.
கோவை, சென்னை போன்ற பெருநகரங்களில் ஆயிரக்கணக்கானோருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் தேவைப்படக்கூடும். ஆனால், அந்த அளவுக்கு நம்மிடம் அக் கருவிகள் இல்லை. இதனால் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம். 15,000 வென்டிலேட்டர்கள் கரோனா சிகிச்சைக்காகக் கையிருப்பில் உள்ளதாகவும், மேலும், புதிதாக 40,000 வென்டிலேட்டர்களை வாங்க உள்ளதாகவும் மத்திய அரசு கூறியிருப்பது வரவேற்கத்தக்க நல்ல செய்தி.
வென்டிலேட்டர்களைப் பொருத்தவரை 95 சதவீதம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. உயிர் காக்கும் இந்தக் கருவிகளை இறக்குமதி செய்கையில், இறக்குமதி வரி உள்ளிட்ட வரிகள் விதிக்கப்படுவதால், அதன் விலையும் அதிகமாகிறது. இதன் பராமரிப்புச் செலவும் அதிகம். இந்த அவலநிலை, இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருத்துவக் கருவிகளுக்கும் உண்டு. இது மிகுந்த வேதனைக்குரியது. எனவே, அனைத்து மருத்துவக் கருவிகளையும் உள்நாட்டிலேயே தரமுள்ளதாகத் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
அளப்பரிய மருத்துவ வசதிகள் கொண்ட அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளே கரோனா பாதிப்பிலிருந்து மீள முடியாமல் திணறி வருகின்றன. நமது நாட்டிலோ அந்த நாடுகளைவிட மருத்துவக் கட்டமைப்பு, உபகரணங்கள் வசதி மிகக் குறைவு. ஆகவே, நம் நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளையும் இப்பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
அவ்வாறு ஈடுபடுத்தப்படும் தனியார் மருத்துவமனைகளை சேவை நிறுவனங்களாக அரசு கருதி, மின் கட்டணத்திலும், மருத்துவக் கருவிகள் மீது விதிக்கப்படும் வரிகளிலும் சலுகை அளிக்க வேண்டும். இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டால், தனியார் மருத்துவமனைகள் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல், தாமாகவே கரோனா சிகிச்சைப் பணிகளுக்கு விரும்பி வருவார்கள்.
கரோனா நோய்க்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கும், சிகிச்சைகளுக்கும் அரசு அதிக அளவு நிதியளிக்க வேண்டும். அப்போதுதான் கடைக்கோடியில் உள்ள ஏழைக்கும் இந்தச் சிகிச்சை சென்றடையும்.
கரோனா நோய்த்தொற்று தாக்கும்பட்சத்தில் 9 முதல் 50 வயது வரை இறப்போர் எண்ணிக்கை 0.25 சதவீதமாகவும், 50 முதல் 70 வயது வரை இறப்பவர்கள் எண்ணிக்கை 2.5 சதவீதமாகவும், 70 முதல் 80 வயது வரை இறப்பவர்களின் எண்ணிக்கை 8 சதவீதமாகவும், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 14.8 சதவீதமாகவும் இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.
சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளவர்கள், புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், புகைப் பழக்கமும் மதுப் பழக்கமும் உள்ளவர்கள் ஆகியோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உடற்பயிற்சி, சத்தான – ஆரோக்கியமான உணவு, உடல் எடையைக் குறைத்தல், நல்ல உறக்கம், மன அழுத்தத்தைக் குறைத்தல் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ள இந்த 21 நாள்களிலும் சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் குறைந்தது 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கைகளை சோப்பு மூலம் 30 விநாடிகள் வரை சுத்தம் செய்ய வேண்டும். வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டும். இவற்றை முறையாகக் கடைப்பிடித்தால் கரோனாவை நாம் வென்று விடலாம்.
கட்டுரையாளர்:
இந்திய மருத்துவ கவுன்சில்
முன்னாள் உறுப்பினர்
Leave a Reply