“மு.க.ஸ்டாலினுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது” என்றும், “எந்தெந்த தொழிற்சாலைகளை திறப்பது என 20-ந் தேதி அறிவிக்கப்படும்” என்றும் சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் சென்றார். சேலம் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் கிர்லோஸ்குமார், மஞ்சுநாதா, சேலம் மாவட்ட கலெக்டர் ராமன், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, சேலம் மாநகர கமிஷனர் செந்தில்குமார், டி.ஐ.ஜி. பிரதீப்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் கேட்டறிந்தேன்.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 9 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை 24 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 7 பேர் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தேன். தற்போது வரை 98 சதவீதம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு மத்திய அரசாங்கத்தால் சில தொழில்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக இன்றைக்கு நம்முடைய நிதித் துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு என்னென்ன தொழில்களை தொடங்க அனுமதிக்கலாம் என்பதை ஆராய்ந்து திங்கட்கிழமை (20-ந் தேதி) அறிவிக்கும்.
சேலம் மாவட்டத்தில் ஜவ்வரிசி ஆலைகள் அதிகளவில் உள்ளன. எனவே, ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் ஆலை உரிமையாளர்களும், மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ள விவசாயிகளும் என்னை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். எனவே, 20-ந் தேதி முதல் ஜவ்வரிசி ஆலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சர்க்கரை ஆலைகள் தொடங்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை எளிதாக கண்டறியக்கூடிய 24 ஆயிரம் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ பரிசோதனை கருவிகள் சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ளன. அந்த ரேபிட் டெஸ்ட் கிட் நாம் பணம் கொடுத்து வாங்கியது. அதே சமயம் மத்திய அரசு 12 ஆயிரம் தருவதாக அறிவித்துள்ளது. ஆனால் அது போதாது என்றும், தமிழகத்திற்கு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் வேண்டும் என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் தேவை என்று சீனாவிடம் பணம் கட்டியுள்ளோம். அதுவும் தமிழகத்திற்கு விரைவில் வந்து சேரும்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதே அரசின் கடமை யாகும். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த காரணத்தால் ஏராளமானோர் குணமடைந்து வீடு திரும்பி செல்வதை காணமுடிகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கடுமையாக போராடி வருகிறோம். இதனால் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை அரசு பொருட்படுத்துவது இல்லை. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. உயிரோடு விளையாடுவது எல்லாம் சரியல்ல. எதிர்க்கட்சி தலைவர் என்றால் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். தினந்தோறும் ஏதாவது அறிக்கை விடுவது, இந்த அரசை குற்றம் சொல்வது.
அனைத்து அதிகாரிகளும் இரவு பகல் பாராமல், தன் குடும் பத்தை விட்டு, தன் உயிரை துச்சமென மதித்து, மக்களுக்காக பணியாற்றி கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே, குற்றம் சொல் கின்ற நேரமா இது?. உயிரை காக்க வேண்டிய நேரம். அதை காப்பதற்கு வழிமுறை சொன்னால் நல்ல கருத்து. அதைவிட்டுவிட்டு, அங்கு ஒரு குறை, இங்கு ஒரு குறை, அப்படி சுட்டிக்காட்டுவது என்ன பொருத்தமாக இருக்கும் என்பதை நீங்களே உணர வேண்டும்.
கொரோனா நோயால் பாதிக் கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது தான் எங்களது தலையாய கடமை. நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நல்லவிதமான கருத்துகளை தெரிவித்தால் அதை ஏற்று செயல்படுவோம். இந்த காலக்கட்டத்தில் இதையெல்லாம் பேசுவது உகந்ததா? எந்த மாநிலத்திலும் இதுபோல் பேசுகிறார்களா?. தமிழ்நாட்டில் தான் இப்படிப்பட்ட அரசியல் நடக்கிறது. தயவு செய்து எதிர்க்கட்சிகளை வேண்டி கேட்டுக்கொள்வது, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங் கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நில்லுங்கள். அது தான் என்னுடைய வேண்டுகோள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Leave a Reply