மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நாடு முழுவதும் 20 லட்சம் சில்லரை விற்பனை கடைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
கொரோனாவின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கடைகளை திறக்கவும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. பொருட்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதிலும் சிரமம் உள்ளது.
பல இடங்களில் மார்க் கெட்டுகளிலும், கடைகளிலும் சமூக விலகலை கடைபிடிக்காமல் மக்கள் நெருக்கமாக நிற்பதால் கொரோனா தொற்று எளிதில் பரவும் ஆபத்து உள்ளது.
இதைத்தொடர்ந்து, மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நாடு முழுவதும் சில்லரை விற்பனை கடைகளை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘சுரக்ஷா ஸ்டோர்ஸ்’ என்ற பெயரில் 20 லட்சம் கடைகளை இன்னும் 45 நாட்களுக்குள் தொடங்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒன்று அல்லது இரு மாநிலங்களில் இந்த திட்டத்தை நிறைவேற்றும் அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த கடைகளில் மளிகை சாமான்கள் மட்டுமின்றி நுகர்வோர் பொருட்கள், ஆடைகளும் விற்பனை செய்யப்படும்.
இந்த சுரக்ஷா ஸ்டோர்கள் உரிய பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளின்படி அமைக்கப்படும். வாடிக்கையாளர்கள் கடைகளுக்குள் செல்லும் முன் கையை கிரிமி நாசினி மூலம் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். வாடிக்கையாளர்களுக்கும் பில் போடும் கவுண்ட்டருக்கும் 1½ மீட்டர் இடைவெளி இருக்க வகை செய்யப்படும். கடை ஊழியர்களுக்கு முக கவசங் கள் அணிந்து இருப்பார்கள்.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகார துறையின் செயலாளர் பவன்குமார் அகர்வால் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். மேற்கண்ட தகவல்களை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
Leave a Reply