தேசிய ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவைகளை நேரடியாக வழங்க விதிக்கப்பட்ட தமிழக அரசின் தடை உத்தரவை எதிர்த்து தி.மு.க., ம.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது.
சென்னை.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் உணவு, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளானவர்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், தனிநபர்கள் உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்புகள் நேரடியாக வழங்கக்கூடாது. மாநகரங்களில் மாநகராட்சி கமிஷனர்கள், மாவட்டங்களில் கலெக்டர்கள் ஆகியோர் மூலமே வழங்கவேண்டும். இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 12-ந்தேதி தடை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, ம.தி.மு.க. சார்பில் வைகோ ஆகியோர் தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘நாட்டில் உள்ள சுமார் 130 கோடி மக்களுக்கு தேவையான அனைத்தையும் அரசை மட்டும் அணுகி பெற முடியாது. ஒருவருக்கு தேவையானவற்றை அருகில் இருக்கும் சக குடிமக்கள் வழங்க வேண்டும் என்று பிரதமரே அறிவுறுத்தியுள்ளார். ஏழை மக்களுக்கு நேரடியாக உணவுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தமிழக அரசின் அறிவிப்பு உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பொதுமக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். பொதுமக்களுக்கு உதவி வழங்கும்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. உதவிகளை வழங்கவேண்டும் என்றால், அதற்கு 2 நாட்களுக்கு முன்பாக உரிய அனுமதியை அரசிடம் பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்’ என்று வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான, அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘இக்கட்டான காலகட்டங்கள் போலவோ அல்லது இயற்கை பேரிடர் காலம் போன்றோ தற்போதைய நிலை இல்லை. மிகவும் ஆபத்தான கொடிய பேரிடராக கொரோனா தொற்று உள்ளதால் இவ்வாறு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு தன்னார்வலர் உணவு வழங்க சென்றால் அதை வாங்க 300-க்கும் அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுகிறார்கள். அவ்வாறு கூடும்போது நோய் தொற்று அதிகமாக வாய்ப்புள்ளது. இதை அனுமதிக்கக்கூடாது.’ என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) தள்ளிவைத்த நீதிபதிகள், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் அதனடிப்படையில் தீர்ப்பு உடனே வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, தமிழக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பொதுமக்கள் மத்தியில் பரவி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த தடை உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் நிவாரணப் பொருட்களை விருப்பம் போல பொதுமக்கள் மத்தியில் சிலர் வினியோகம் செய்கின்றனர். பொதுமக்களம் இடைவெளி விட்டு நிற்காமல் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு பொருட்களை பெறுகின்றனர். (இதற்கான புகைப்படத்தை இணைத்துள்ளோம்) இந்த கூட்டத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் கூட, அதை பலருக்கு பரவி விடும் அபாயம் உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கி விட்டது. சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தாக்கி பலியாகியுள்ளனர். இதனால் தேசிய ஊரடங்கு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோரின் முக்கிய கடமை என்னவென்றால், வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
ஆனால், தற்போது இந்த வழக்கில் அரசின் உத்தரவு திரித்துக் கூறப்படுகிறது. அரசை பொருத்தவரை, சிரமத்தில் உள்ள பொதுமக்களுக்கு உணவு, நிவாரண பொருட்களை வழங்க யாருக்கும் தடை விதிக்கவில்லை. இவற்றை எல்லாம் வழங்க வழிமுறைகளைத்தான் அரசு உருவாக்கியுள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply