புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் கொரோனா பரவலாம் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாஷிங்டன்,
தெற்காசிய பொருளாதார கொரோனாவின் தாக்கம் எனும் பெயரில் ஆய்வறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
உலகின் மிக அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதிகளில் தெற்காசியாவும் ஒன்று. நகர்ப்புறங்கள், மற்றும் உள்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது இப்பகுதியில் மிகப்பெரிய சவாலாகும். இங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே எளிதாக பரவுகிறது.
இந்தியா, வங்காள தேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பொது போக்குவரத்தை ரத்து செய்வதற்கு போதிய கால இடைவெளியை அறிவிக்கவில்லை.
அந்த நேரத்தில் புலம்பெயரும் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல கூட்டமாக கூடினர். மேலும் அவர்கள் அனைவரும் போதிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் சென்றதால் கொரோனா வைரஸ் மேலும் எளிதாக பரவும் அபாயம் உள்ளது. சீனா மற்றும் அமெரிக்காவை விட தெற்கு ஆசிய நாடுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைவாகவே உள்ளனர். இது உயிரிழப்புகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும்.
எனினும் மற்ற நாடுகளை போல மருத்துவ உபகரணங்கள்(சானிடைசர், முககவசம், வெண்டிலேட்டர்) எளிதாக கிடைப்பதில்லை. பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறை நாடுகளை உள்நாட்டுப் பொருட்களை சேமிக்க வழிவகுத்தது.
ஊரடங்கு திட்டம் புலம்பெயர்ந்த லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. அவ்வாறு புலம் பெயர்ந்தோர் வேலை இல்லாமல் பட்டினி கிடப்பதற்கும் அல்லது சொந்த ஊர்களுக்கு பல கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்லும் அபாயகரமான செயலையும் எதிர் கொண்டனர். இந்தியாவில் அதிக அளவிலான குடிசைப்பகுதிகள் உள்ளன. அதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே முதற்கட்டமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உயிர் இழப்பைக் கட்டுப்படுத்த புலம் பெயர்ந்தோருக்கு உடனடி உதவியை அரசாங்கங்கள் பரிசீலிக்க வேண்டும், பயணிக்கும் புலம் பெயர்ந்தோருக்கும் தகுந்த உதவிகளை அரசாங்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply