அமெரிக்காவில் கொரோனா அச்சம் காரணமாக பிறந்தநாள் விழாவிற்கு யாருமே வராததால் கவலையில் இருந்த சிறுவனுக்கு, போலீசார் வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பிறந்த நாளுக்கு யாருமே வராததால் கவலைப்பட்ட சிறுவன்… வாகனங்களில் அணிவகுத்து வந்து வாழ்த்திய போலீசார்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 7.10 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நோய் அறிகுறி உள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருப்பர்கள் என பல லட்சம் மக்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க முடியாமல் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளன.
இந்நிலையில், கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக பிறந்தநாள் விழாவிற்கு யாரும் வராததால் கவலையில் இருந்த ஒரு சிறுவனுக்கு, போலீசார் வாகனங்களில் அணிவகுத்து வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வீட்டில் எளிமையாக பிறந்த நாள் கொண்டாடிய சிறுவனை வாழ்த்த, நண்பர்கள், உறவினர்கள் யாரும் வராதாதால் கவலை அடைந்துள்ளான். இதனைக் கவனித்த அவனது தந்தை, காவல்துறையை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் ரோந்து வாகனங்களில் சிறுவனின் வீட்டுக்கு அணிவகுத்து வந்தனர். வீட்டின் முன்பு வாகனங்களை நிறுத்திய அவர்கள், சிறுவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். சைரன்களை ஒலித்தும், ஹேப்பி பர்த்டே பாடலைப் பாடியும் சிறுவனை மகிழ்வித்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தனது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து, ‘அமெரிக்க காவல்துறையினரின் அற்புதமான செயலைப் பாருங்கள்’ என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ஏராளமானோர் லைக் மற்றும் ஷேர் செய்துள்ளனர்.
Leave a Reply