பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சீன அரசு கூடுதல் மருத்துவப் பொருட்களை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4700ஐ தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 190 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நட்பு நாடான சீனா உதவி வருகிறது. மருந்துகள், முக கவசங்கள், கவச உடைகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை வழங்கியது. தற்போது கூடுதல் மருத்துவப் பொருட்களை விமானம் மூலம் அனுப்பி உள்ளது.
பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் (பிஐஏ) சிறப்பு விமானம் சீனாவிலிருந்து அதிக மருத்துவ பொருட்களுடன் வந்து கொண்டிருப்பதாகவும், இது கடந்த இரண்டு நாட்களில் வரும் இரண்டாவது விமானம் என்றும் சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் நக்மனா ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.
நன்கொடையாக வழங்கப்பட்ட 50 வென்டிலேட்டர்கள், பிபிஇ உபகரணங்கள் கொண்ட பிஐஏ சிறப்பு விமானம் சீனாவின் செங்டுவில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு இன்று புறப்பட்டதாகவும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானும் சீனாவும் அனைத்து சூழ்நிலைகளிலும் நட்புறவை தொடர்வதுடன், முக்கியமான பிரச்சினைகளில் உறுதியான ஆதரவை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply