நியூயார்க் நகரில் கொரோனாவால் அதிகம் பேர் பலியாவதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நியூயார்க்:
உலகில் கொரோனா நோய்க்கிருமியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்க விளங்குகிறது. அங்கு கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,108 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக நியூயார்க் விளங்குகிறது. அங்கு மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இது இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களை விட அதிகம் ஆகும். மேலும் 7,800-க்கும் அதிகமான பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இதற்கான காரணம் என்ன என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நியூயார்க்கில் அதிக மக்கள் வசிப்பதாலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதாலும்தான் அங்கு கொரோனாவின் தாக்கமும், சாவும் அதிகமாக இருப்பதாக நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவின் நிதி தலைநகராக விளங்கும் நியூயார்க்கில் 86 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அமெரிக்காவிலேயே மக்கள் தொகை நெருக்கம் இங்குதான் அதிகம். ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 10 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். நடைபாதைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதும். சுரங்க பாதைகளில் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு செல்லும் நிலைதான் உள்ளது. அந்த அளவுக்கு மக்கள் சாரை சாரையாக சென்று கொண்டு இருப்பார்கள்.
மேலும் நியூயார்க்குக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகம். பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கு சுற்றுலாவாக ஆண்டுக்கு 6 கோடி பேர் வருகிறார்கள். மக்கள் தொகை நெருக்கம் மற்றும் சுற்றுலா பயணிகள் காரணமாக இங்கு கொரோனா அதிக அளவில் பரவி இருப்பதாக கருதப்படுகிறது.
ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்துதான் நியூயார்க்குக்கு கொரோனா பரவி இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. நியூயார்க்கில் கொரோனா தொற்று பரவி இருப்பது முதன் முதலாக மார்ச் 1-ந் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
கொரோனா பரவல் பற்றிய தகவல் வெளியான போதும் ஆரம்பத்தில் மக்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாகவே நடமாடினார்கள். நோய்க்கிருமி வேகமாக பரவுவதற்கு அதுவும் காரணமாக அமைந்து விட்டது.
நியூயார்க்கில் நோய்க்கிருமி பரவுவது அதிகமானதை தொடர்ந்து நகரில் உள்ள பள்ளிகள், ஓட்டல்கள், மதுபான விடுதிகள் மூடப்படுவதாக நகர மேயர் பில் டி பிலாசியோ மார்ச் 16-ந் தேதி அறிவித்தார்.
அதன்பிறகு வர்த்தக நிறுவனங்களை மூடுமாறும், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறும் 22-ந் தேதி அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகும் கொரோனா பரவுவது குறையவில்லை.
நியூயார்க்கில் தினந்தோறும் ஏராளமான பேர் உயிர் இழப்பதால், ஆஸ்பத்திரிகளில் பிணவறைகளில் உடல்களை வைக்க இடம் இல்லை. யாரும் வந்து உரிமை கோராமல் இருக்கும் உடல்களை ஹார்ட் தீவுக்கு கொண்டு சென்று புதைக்கிறார்கள். அங்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 25 உடல்கள் புதைக்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உடல்களை புதைக்க ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பாதிப்பு மற்றும் கட்டுப்பாடுகளின் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருப்பதால், பிணவறைகளில் உரிமை கோராமல் நிறைய உடல்கள் இருப்பதாகவும், உறவினர்கள் யாரும் வர வாய்ப்பு இல்லை என்று தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உடல்களை வியாழக்கிழமை தோறும் ஹார்ட் தீவுக்கு கொண்டு சென்று புதைப்பதாகவும், மற்ற உடல்களை பாதுகாப்பாக வைத்து இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார். பிணவறைகளில் உடல்களை 30 முதல் 60 நாட்கள் வரை வைத்து பாதுகாக்கத்தான் வசதி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply