நாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை, எவை என்பது குறித்து மத்திய அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் 500-ஐ எட்டுகிறது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி அண்மையில் வெளியிட்டார்.
அப்போது, அவர் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் வருகிற 20-ந்தேதி முதல் நிபந்தனையுடன் சில தளர்வுகள் அளிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் 20-ந்தேதி (நாளை) முதல் செயல்பாட்டிற்கு வரும் சேவைகள், தொழில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
* ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள் செயல்படும்.
* வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி.
* மீன்பிடித் தொழில் தொடர்ந்து இயங்கும்.
* தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.
* நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும்.
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடரும். இதில் ஊழியர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
* பொது வினியோகத்துறை செயல்படும்.
* மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி.
* ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்விக்கு அனுமதி.
*அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யலாம்.
* வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.
* கட்டிட தொழில்களை தொடர அனுமதி.
* தனியார் வாகனங்களை மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக இயக்கலாம்.
* அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும்.
இந்த அறிவிப்புகள் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு (ஹாட்ஸ்பாட்) பொருந்தாது என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply