நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் நபார்டு, தேசிய வீட்டு வசதி வங்கி போன்ற மத்திய அரசின் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி ரூ.50 ஆயிரம் கோடி கடன் வழங்குகிறது.
மும்பை,
கொரோனாவால் உலகில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்வேறு நாடுகளின் மைய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்த நிலையில் ரிசர்வ் வங்கியும் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை குறைத்தது.
அதன்படி ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும் குறைந்தது. இந்த வட்டி குறைப்பின் பலனை வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்க வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் வீடு மற்றும் வாகன கடன் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், வங்கிகள் ரிசர்வ் வங்கியில் செலுத்தும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வட்டி விகிதம் 3.75 சதவீதமாக குறைந்து இருக்கிறது.
அதே சமயம் வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. எனவே அது 4.40 சதவீதமாக நீடிக்கிறது.
இதுதவிர வேறு சில முக்கிய நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி எடுத்து உள்ளது. குறிப்பாக நபார்டு (தேசிய வேளாண்மை மற்றும் ஊரக அபிவிருத்தி வங்கி), சிட்பி (இந்திய சிறு தொழில்கள் அபிவிருத்தி வங்கி), தேசிய வீட்டு வசதி வங்கி போன்ற மத்திய அரசு நிதி நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வழங்குகிறது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த கடன் உதவி நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும்.
மேலும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு 2019-20-ம் ஆண்டுக்கு லாப ஈவுத்தொகை (டிவிடெண்டு) வழங்குவதில் இருந்து வங்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று மாநிலங்கள் 60 சதவீதம் அதிகமாக கடன்களை வாங்கி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. செப்டம்பர் 30-ந் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படுகிறது. வங்கிகளின் வாராக்கடன் விதிமுறைகளிலும் தளர்வு செய்யப்பட்டு உள்ளது.
தற்போதைய சவாலான சூழ்நிலையில் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டீ.பி) 3.2 சதவீத அளவுக்கான நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரூ.1.2 லட்சம் கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை சப்ளை செய்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம்தான் நிர்ணயிக்கிறது. எனவே அது தொடர்பான மதிப்பீடும் இப்போது வெளியிடப்பட்டு உள்ளது. இரண்டாவது அரையாண்டில் பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் கீழ் வர வாய்ப்பு உள்ளது என இந்த வங்கி கூறி உள்ளது.
இந்த ஆண்டில் இயல்பான பருவமழை எதிர்பார்க்கப்படுவதால் ஊரக பகுதிகளில் விரைவில் தேவை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, அடுத்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்றும், அது கொரோனா பாதிப்புகளுக்கு முந்தைய வளர்ச்சி வேகமாக இருக்கும் என்றும் மதிப்பீடு செய்து இருக்கிறது.
Leave a Reply