புதுடில்லி: இடம் பெயர்ந்து பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் ஒருமாதம் வாடகை வாங்கக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இதனால் பிற மாநிலங்களுக்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பல தொழிலாளர்கள் நடைப்பயணமாக சொந்த ஊர் திரும்புகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பேரிடம் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: வாடகைக்கு இருக்கும் இடம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாத வாடகை வாங்கக்கூடாது. அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றவும் கூடாது. இந்த உத்தரவை மீறினால் உரிமையாளர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை எந்தவொரு விலக்குமின்றி நிறுவனங்கள் வழங்க வேண்டும். புலம் பெயர்ந்த மக்கள், தங்கள் சொந்த மாநிலம் அல்லது சொந்த ஊருக்கு திரும்பியவர்களை 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு முகாமில் கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவு, தங்குமிட வசதிகளை மாநில அரசுகள் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால்
இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சொந்த ஊருக்கு திரும்பும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது: அதிகமான மக்கள் தங்கள் சொந்த பகுதிக்கு திரும்ப செல்கின்றனர். அவர்களிடம் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். பிரதமர் மோடி, ஊரடங்கை அறிவித்தபோது, அனைவரும் தாங்கள் இருக்கும் பகுதியிலேயே தங்கியிருங்கள், வெளியே வராதீர்கள் எனக் கூறினார். இதனை நாம் பின்பற்றவில்லை எனில் கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில், நமது நாடு தோல்வியடையும். எனவே டில்லியில் இருந்து இடம்பெயர்ந்து செல்லாமல் தங்கள் இருப்பிடத்திலேயே தங்குங்கள். அப்படி உள்ளவர்களின் வாடகையை அரசே செலுத்தும். வீட்டு உரிமையாளர்கள் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
Leave a Reply