புதுடில்லி : வரவிருக்கும் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 3.5 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது, எஸ் அண்டு பி குளோபல்ரேட்டிங்ஸ் நிறுவனம். இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அடுத்த நிதியாண்டில், நாட்டின் வளர்ச்சி, 3.5 சதவீதமாக இருக்கும். இதற்கு முன், 5.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், கடன் தகுதியானது சரியும் என, எதிர்பார்க்கப்படுவதுதான். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்தியாவில் தேவைகள் குறைந்து, அதன் காரணமாக, கடனை திருப்பி செலுத்துவதில் சிக்கல்கள் எழும். இதன் தொடர்ச்சியாக, கடன் தகுதியும் குறையும்.
அரசு அறிவித்திருக்கும் சலுகைகளும், ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பும் ஓரளவு பலன் தரும் என்றாலும், தேவைகள் குறைவதால், கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போய்விடும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.குறிப்பாக, நிதி சாரா பெருநிறுவனங்கள் கடன் தகுதி குறையும். இது பொருளாதாரத்தை பாதிக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நோமுராவும், இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பை குறைத்துள்ளது.தேவைகள் குறையும் காரணத்தால், இந்திய பொருளாதாரத்தில் பாதிப்புகள் அதிகரிக்கும் என, இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கிட்டத்தட்ட, 75 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டதால், நடப்பு ஆண்டின் வளர்ச்சி, முன்பு கணித்திருந்த, 4.5 சதவீதம் என்பதிலிருந்து, 0.5 சதவீதம் குறைந்து, 4 சதவீதமாக இருக்கும் என,தெரிவித்துள்ளது.மேலும், நடப்பு நிதியாண்டின், நான்காவது காலாண்டில், 3.1 சதவீதமாக குறையும் என்றும் தெரிவித்துள்ளது.உள்நாட்டு நிறுவனமான, இண்டியா ரேட்டிங்ஸ் நிறுவனமும், அடுத்த நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி, 3.6 சதவீதமாக இருக்கும் என, முந்தைய கணிப்பிலிருந்து குறைத்து அறிவித்துள்ளது.
Leave a Reply