தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால், தி.மு.க. இன்று ஏற்பாடு செய்து இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஆனால், கொரோனா மருத்துவம் சார்ந்த விஷயம் என்பதால் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அவசியம் இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி விட்டார்.
மேலும், ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் நேரடியாக உதவி செய்யக்கூடாது என்றும், நிவாரண பொருட்களை அரசிடம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசின் அணுகுமுறைகள் பற்றி விவாதிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தி.மு.க. ஏற்பாடு செய்து இருந்தது. இந்த கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால், அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.
இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் நேற்று மாலை, அண்ணா அறிவாலயத்துக்கு நோட்டீஸ் ஒன்றை கொடுத்தனர்.
அந்த நோட்டீசில், ஊரடங்கு உத்தரவு மத்திய-மாநில அரசுகளால் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை (இன்று) நடக்க உள்ள கூட்டத்தை தவிர்த்திட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் காணொலி காட்சி மூலம் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நோட்டீசை அண்ணா அறிவாலயத்தில் இருந்த தி.மு.க. கட்சி நிர்வாகிகள் கையெழுத்து போட்டு வாங்கிக்கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தி.மு.க. சார்பில் நேற்று இரவு தேனாம்பேட்டை போலீசாருக்கு பதில் நோட்டீஸ் ஒன்று கொடுக்கப்பட்டது.
அந்த நோட்டீசில், தமிழக சுகாதாரத்துறையின் வழி காட்டுதல்படி சமூக இடைவெளியை பின்பற்றி, தி.மு.க. சார்பில் கூட்டப்பட்டுள்ள அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும், அந்த கூட்டத்தில் 11 பேர் மட்டும் கலந்து கொள்வார்கள் என்றும், தெரிவிக்கப்பட்டிருந்ததாக போலீசார் கூறினார்கள்.
Leave a Reply