வாஷிங்டன்: “கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்தாலும், திட்டமிட்டபடி, நவம்பர், 3ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறும்,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அமெரிக்காவில், வரும் நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், நாட்டின் அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப், மீண்டும் களமிறங்க இருக்கிறார். ஜனநாயக கட்சி சார்பில், வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல், பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2.75 லட்சத்தை தாண்டியுள்ளது; உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 7,100ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. வைரஸ் தீவிரமடைந்து வருவதால், பல மாகாணங்களில், வேட்பாளர்களை தேர்வு செய்யும் தேர்தல், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வைரசின் வீரியம் குறையாமல், இதே நிலைமை தொடர்ந்தால், அதிபர் தேர்தல், எப்படி நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிபர் தேர்தலில், ஓட்டு போட மக்கள் வெளியே வருவதை தவிர்க்க, மின்னஞ்சல் மூலம் ஓட்டு போடும் நடைமுறையை பின்பற்றலாம் என, பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்படாது. திட்டமிட்டபடி, நவம்பர், 3ம் தேதி, தேர்தல் நடைபெறும். ஓட்டுச் சாவடிகளுக்கு, மக்கள் நேரில் சென்று, வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து, ஓட்டு போட வேண்டும். மின்னஞ்சல் மூலம் ஓட்டு போடும் நடைமுறையில், ஏமாற்ற முடியும் என்பதால், அந்த முறையில் தேர்தல் நடத்தப்படாது. இவ்வாறு, அவர் கூறினார்.
Leave a Reply