தமிழகத்தில், அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு கொண்ட ‘சிவப்பு பகுதி’ மாவட்டங்களின் எண்ணிக்கை நேற்று 25 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் கொரோனா வைரசால் 22 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட(ஹாட்ஸ்பாட்) மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்த அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியல், 15 நோயாளிகளுக்கு மேல் பாதித்தவர்கள் அந்த மாவட்டங்களில் இருந்தாலும் மற்றும் 4 நாட்களில் அந்த மாவட்டத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்தாலும் என்ற அடிப்படையில் அது அதிகம் பாதிக்கப்பட்ட(ஹாட்ஸ்பாட்) மாவட்டமாக வகைப்படுத்தப்பட்டது. மேலும் இந்த அதிகம் பாதித்த மாவட்டங்கள் சிவப்பு நிறம் கொண்டு குறிக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 மாவட்டங்களாக இருந்த இந்த ‘ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்கள் தற்போது 25 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் மிதமான பாதிப்பு கொண்ட மாவட்டங்களாக, 1 முதல் 15 நோயாளிகள் கொண்ட மாவட்டங்கள் என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. அந்த கணக்கீட்டின்படி தமிழகத்தில் 9 மாவட்டங்கள் கொரோனா வைரசால் மிதமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இந்த மாவட்டங்கள் ஆரஞ்சு நிறம் கொண்டு குறிக்கப்படுகின்றன. மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகாத மாவட்டங்கள் அனைத்தும் பச்சை பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களில் தற்போது வரை கொரோனா பாதிப்பு இல்லாததால் அவை பச்சை பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்றைய சூழ்நிலையில் இந்தியாவின் 320 மாவட்டங்களில் புதிதாக கொரோனா நோய்த்தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply