டெல்லியில் மத்திய மந்திரிகள் அலுவலகம் சென்று தங்கள் பணிகளை தொடங்கினர்.
புதுடெல்லி,
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன. அரசு அலுவலகங்களில் குறைந்த அளவிலான ஊழியர்களே பணிக்கு வருகிறார்கள்.
டெல்லியில் உள்ள மத்திய அமைச்சக அலுவலகங்களிலும் பணிகள் முடங்கின. ஊரடங்கின் காரணமாக வீடுகளில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ளுமாறு மந்திரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அவர்கள் வீடுகளில் இருந்தவாறு தங்கள் துறை சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வந்தனர். அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளையும் பிறப்பித்தனர்.
கொரோனா பாதிப்பு குறித்து சமீபத்தில் மந்திரிசபையை கூட்டி ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, படிப்படியாக அலுவலகங்களுக்கு சென்று வழக்கமான பணிகளை செய்யுமாறு மந்திரிகளை கேட்டுக் கொண்டார்.
அதன்படி, வாரத்தின் முதல் வேலை நாளான நேற்று முதல் மத்திய மந்திரிகள் தங்கள் அலுவலகங்களுக்கு சென்று பணிகளை மேற்கொண்டனர். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, நிதி இலாகா ராஜாங்க மந்திரி அனுராக் தாக்குர், இளைஞர் நல ராஜாங்க மந்திரி கிரண் ரிஜிஜூ, கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை ராஜாங்க மந்திரி பிரகலாத் பட்டீல் உள்ளிட்ட மந்திரிகள் காலையிலேயே அலுவலகங்களுக்கு சென்றனர்.
வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முக கவசத்தை அணிந்து வடக்கு பிளாக்கில் உள்ள தனது அலுவலகத்துக்கு பணியாற்ற சென்று இருந்ததாக நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோல் அனுராக் தாக்குரும் முக கவசம் அணிந்து சென்று இருந்ததாக டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இமாசலபிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் மற்றும் அந்த மாநில எம்.எல்.ஏ.க்களுடன் தான் ஆலோசனை நடத்தியதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
அலுவலக வாகனங்களை பயன்படுத்தும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் திங்கட்கிழமை முதல் பணிக்கு வரவேண்டும் என்று மத்திய அரசு கூறி இருந்தது. அதன்படி இணைச் செயலாளர்கள் மற்றும் அதற்கும் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளும் நேற்று பணிக்கு சென்று இருந்தனர்.
Leave a Reply