கொரோனா வைரஸ் சிகிச்சையில் ஈடுபடும் டாக்டர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
கொரோனா வைரசால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ஆஸ்பத்திரிகளுக்கும், பரிசோதனை மையங்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கும் செல்கிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப்பணியாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய அரசு நேற்று அதிரடியாக உத்தரவிட்டது.
இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊரடங்கு தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் கண்டிப்புடன் செயல்படுத்தி வருகின்றன.
கொரானா வைரஸ் பாதித்தவர்களுக்காக சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகளுக்கும், பரிசோதனை மையங்களுக்கும், தனிமைப்படுத்தல் மையங்களுக்கும் செல்லும்போது டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மீண்டும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், மீன் வளம் மற்றும் மீன் வளர்ப்பு நடவடிக்கை களுக்கு பேரழிவு மேலாண்மை சட்டத்தின்கீழ், இந்த ஊரடங்கு காலத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான எல்லாப்பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் சமூக இடைவெளியை பராமரித்தல், சுகாதாரம் பேணுதல் போன்றவற்றை உரிய அமைப்புகளின் தலைவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
Leave a Reply