சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டியவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு நவீன முக கவசம் நேற்று வழங்கப்பட்டது. இந்த நவீன முக கவசம் முகத்தில் காது, கண் போன்றவற்றையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி. பேராசிரியர் கள் வடிவமைத்துள்ள இந்த முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி கலந்துகொண்டு, இந்த புதிய முக கவசங்களை போக்குவரத்து போலீசாருக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா நிவாரண பொருட்களை வழங்குவதற்கு தன்னார்வலர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித தடையும் இல்லை. அதை வழங்கும் வழிமுறைகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் அல்லது வருவாய் துறை அதிகாரிகள் மூலமாக கொரோனா நிவாரண பொருட்களை வழங்க வேண்டும். அதற்கு எவ்வித தடையும் இல்லை.
வெள்ளம் ஏற்பட்ட காலத்தில் நிவாரண பொருட்கள் வழங்கியதைபோல, இப்போது வழங்க முடியாது. இப்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும் நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.
சென்னை நகரில் இப்போது வரை 144 தடை உத்தரவை மீறியதற்காக 49 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளது. 23 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்களை ஓட்டிச்சென்றவர்களின் ஓட்டுனர் உரிமத்தை 6 மாதங்கள் ரத்து செய்யவும் உரிய பரிந்துரை செய்யப்படும்.
எனவே தேவை இல்லாமல் வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குபவர்கள் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று வாங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண், நிருபர்களிடம் கூறும்போது, தற்போது முதல் கட்டமாக 3 ஆயிரம் நவீன முக கவசங்கள் வாங்கப்பட்டு போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், மேலும் 24 ஆயிரம் முக கவசங்கள் வாங்கப்பட்டு சென்னை போலீசார் அனைவருக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
Leave a Reply