சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் சமூக இடைவெளியை மறந்து அலைமோதினர். இதனால் இன்று முதல் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காய்கறிகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்படவில்லை. மாறாக, தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு காய்கறிகள், கனிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மற்றும் ஒரு குறிப்பிட்ட வியாபாரிகள் சங்கம் சார்பில் பலருக்கு ‘பாஸ்’ வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், நேற்று அதிகாலை 4 மணி முதலே கோயம்பேடு மார்க்கெட்டில் வழக்கத்தைவிட கூடுதலாக மக்கள் கூட்டம் அலைமோதி உள்ளது.
இதனால், மார்க்கெட் முதல் தே.மு.தி.க. அலுவலகம் வரை நேற்று சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை போலீசார், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து சரி செய்தனர்.
மேலும், வியாபாரிகள் தவிர்த்து பொதுமக்களும் காய்கறி வாங்க ஏராளமானோர் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்றுள்ளனர். காய்கறியும் விலை மலிவாக விற்பனை செய்யப்பட்டதால், மக்கள் சமூக இடைவெளியை மறந்து ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு முண்டியடித்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
பொதுமக்களுக்கு தடை
கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் நேற்று சமூக இடைவெளியை மறந்து கூடியதன் எதிரொலியாக இன்று (சனிக்கிழமை) முதல் வியாபாரிகளை தவிர்த்து பொதுமக்கள் காய்கறி வாங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
Leave a Reply