காய்கறிகள் விளைச்சல் அதிகம் காரணமாக ஊரடங்கிலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து தங்கு தடையின்றி வருகிறது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது
காய்கறிகள்
போரூர்:
கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி 350-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் தினசரி விற்பனைக்கு வருகிறது.
கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுத்திடும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் பலர் தங்களது கடைகளை அடைத்துள்ளனர்.
இதேபோல் மார்கெட்டில் வேலை பார்த்து வந்த கூலி தொழிலாளர்கள் பலரும் காய்கறிகள் கொண்டு வந்த லாரிகள் மூலமாக அவர்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.
காய்கறிகள் விளைச்சல் அதிகம் காரணமாக ஊரடங்கிலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து தங்கு தடையின்றி வருகிறது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இன்று காலை 300 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது. வெங்காயம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.10 முதல் 18 வரையிலும், தக்காளி ஒரு கிலோ ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சில்லரை வியாபாரி சித்திரை பாண்டியன் கூறும்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் காலை 10 மணிக்கு மேல் மார்கெட்டிற்கு மக்கள் அதிகளவில் வருவது கிடையாது. வியாபாரம் வெகுவாக குறைந்து உள்ளது.
மேலும் தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக 2 நாட்களுக்கு முன்பே கோயம்பேடு சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதும். வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும்.
ஆனால் கடந்த 2நாட்களாக மக்கள் நடமாட்டம் குறைந்து மார்கெட் வெறிச்சோடிய நிலையில்தான் இருந்தது. இதேபோல் அதிகாலை 3மணிக்கு மொத்த வியாபாரிகளிடம் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து சில்லரையில் விற்பனை செய்து வருகிறோம்.
விலை வீழ்ச்சி காரணமாக காலை 6மணிக்கு மேல் மொத்த வியாபாரிகளே காய்கறிகளை குறைந்த விலைக்கு விற்பதால் எங்களது வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் சில்லரை விற்பனை விலை கிலோவில் வருமாறு:-
தக்காளி-ரூ.10, வெங்காயம்-ரூ.25, சின்ன வெங்காயம்-ரூ70. உருளைக்கிழங்கு-ரூ.30, பரங்கிக்காய்-ரூ.20, கத்தரிக்காய்-ரூ.30, கேரட்-ரூ.40, பீன்ஸ்-ரூ.50, வெண்டைக்காய்-ரூ.30, பாகற்காய்-ரூ.30, கொத்தவரங்காய்-ரூ.40, புடலங்காய்-ரூ.20, பச்சை மிளகாய்-ரூ.30, இஞ்சி-ரூ.80, கோவக்காய்-ரூ.30, சுரக்காய்-ரூ.20, முட்டை கோஸ்-ரூ.20, முருங்கைக்காய்-ரூ.40, சேனைக்கிழங்கு-ரூ.30.
Leave a Reply