கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு சீன அரசு கடிவாளம் போட்டிருக்கிறது. இது அறிவியல் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பீஜிங்,

உலக நாடுகள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரசின் தோற்றம் பற்றிய கேள்விகள் பில்லியன் டாலர் கேள்விகளாக நிலைத்து நிற்கின்றன.

சீனாவின் உகான் நகரில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில்தான் இந்த வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி தோன்றியது என்பதுதான் இதுவரை சொல்லப்பட்டு வருகிற தகவலாக இருந்து வருகிறது.

இதுபற்றிய தகவல்கள் வெளியுலகத்துக்கு வந்த உடனேயே அந்த சந்தை மூடப்பட்டு விட்டது. இன்றுவரை அது திறக்கப்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றிய காரணத்தால் அதை சீன வைரஸ் என்றே அழைத்தார். அது சர்ச்சைக்கு வழி வகுத்தது. இதில் அமெரிக்காவும், சீனாவும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.

இந்த வைரஸ் பற்றிய தகவல்களை உலகுக்கு சீனா தாமதமாக பகிர்ந்து கொண்டதால்தான் அது கொள்ளை நோய் போல மாற வழிவகுத்துவிட்டது என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இந்த உயிர்க்கொல்லி வைரசை உகானில் சீனா கட்டுக்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, டிரம்ப் விவகாரத்தை கையில் எடுத்தார். அந்த வைரசை சீன வைரஸ் அல்லது உகான் வைரஸ் என்று பெயர் சூட்டி டிரம்ப் அழைத்ததை ஜின்பிங் நிர்வாகம் கடுமையாக எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியது.

இப்படி சொல்வது தங்கள் நாட்டை களங்கப்படுத்துவது ஆகும் என்றே சீனா கூறியது. சீனா இந்த வைரஸ் விவகாரத்தில் உண்மைகளை மூடி மறைத்து விட்டது என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ உறுதிபட ஒரு குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் கூறினார்.

அதற்கு கடந்த 9-ந்தேதி சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பதில் அளித்தபோது, “கொரோனா வைரஸ் பற்றி உலக சுகாதார நிறுவனத்துக்கு முதலில் புகார் அளித்தது சீனாதான். இதற்கு உகானில் இருந்து அந்த வைரஸ் தோன்றியது என்று அர்த்தம் கிடையாது” என சூடாக கூறினார்.

மேலும், “இந்த வைரஸ் உலகில் வேறு எங்காவது தோன்றி இருக்கக்கூடும். அதன் தோற்றம், அறிவியல் சார்ந்த விவகாரம். அதை அறிவியல் சமூகத்திடமும், மருத்துவ சமூகத்திடமும் விட்டுவிட வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

இதே ஜாவோ, மார்ச் 12-ந்தேதி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், அமெரிக்க ராணுவம்தான் இந்த வைரசை உகான் நகரில் கொண்டு வந்து போட்டது என்று ஒரு குற்றச்சாட்டை சுமத்த, அது அடுத்த சில நாட்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு தூதரக ரீதியில் அமெரிக்கா தனது எதிர்ப்பை பதிவு செய்தது. ஆனாலும் இந்த கொரோனா வைரஸ் எப்படி உருவானது, எங்கே உருவானது, எப்படி பரவத்தொடங்கியது, அதன் அடிநாதம்தான் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம், உலக மக்கள் அத்தனை பேருக்கும் எழுந்து இருக்கிறது.

இது தொடர்பாக உலகளவில் ஆராய்ச்சியாளர்கள் மாய்ந்து, மாய்ந்து ஆராய்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவதற்கு சீன அரசு புதிய கடிவாளம் போட்டுள்ளது. இது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் ஆராய்ச்சி கட்டுரைகள் அனைத்தும் வெளியிடுவதற்காக சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாக சீன அரசின் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சீனாவில் உள்ள ஜின்பிங் அரசு உத்தரவு போட்டு இருக்கிறது.

இந்த உத்தரவு, ஷாங்காய் நகரில் உள்ள புகான் பல்கலைக்கழகம், உகான் நகரில் இருக்கிற உகான் புவி அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சீன அரசின் புதிய கொள்கை முடிவு, கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு கட்டுரைகளை பொறுத்தமட்டில் சீன அரசு அதிகாரிகள் ஆராய்ந்து ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி அவர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அவை வெளியுலகுக்கு தெரிய வரும் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது.

இந்த தகவல்களை அமெரிக்காவின் சி.என்.என். டெலிவிஷன் மோப்பம் பிடித்து அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்புகள் குறித்து விசாரணைகள் எழுந்ததை தொடர்ந்து பல்கலைக்கழகங்களின் இணையதளங்களில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும் சி.என்.என். கூறி உள்ளது.

இதையொட்டி பெயர் குறிப்பிட விரும்பாத சீன விஞ்ஞானி ஒருவர் கவலை தெரிவித்தார். அவர் கருத்து தெரிவிக்கையில், “சீன அரசின் இந்த நடவடிக்கை கவலை அளிக்கிறது. இது முக்கியமான அறிவியல் ஆராய்ச்சியைத் தடுக்கும். சீனாவில் இந்த வைரஸ் தோன்றவில்லை என்று கூறி உண்மைகளை மறைப்பதற்கு சீன அரசாங்கத்திடம் இருந்து வந்துள்ள ஒருங்கிணைந்த முயற்சி இது என்று கருதுகிறேன்” என கூறினார்.

மேலும், “கொரோனா வைரஸ் தொடர்பான புற உலக ஆராய்ச்சிகளை அவர்கள் பொறுத்துக்கொள்வார்கள் என்று நான் கருதவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார். சீன அரசின் இந்த நடவடிக்கை, உலக நாடுகளை குறிப்பாக அறிவியல் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page