கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்திய பொருளாதாரம் கடுமையாக சீர்குலைந்துள்ளது என்பது உலக வங்கி அறிக்கையில் அம்பலமாகி உள்ளது.
வாஷிங்டன்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இந்திய தொழில் துறை முற்றிலுமாய் முடங்கி உள்ளது.
இந்தநிலையில், கொரோனா வைரசால் தெற்காசியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் குறித்து உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியா பொருளாதாரம் கடுமையாக சீர்குலைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-
* கொரோனா வைரசால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். 2020-ம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீத அளவுக்கே இருக்கும். 2021-ம் ஆண்டு, அது 2.8 சதவீத அளவுக்கு சரியும். அப்போது சேவைத்துறை கடுமையாக பாதிக்கும்.
* தொடர்ச்சியான நிதித்துறை பலவீனத்தால் ஏற்கனவே இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வந்தது. இந்த சமயத்தில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி விட்டது.
இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊரடங்கை அறிவித்தது. மக்கள் போக்குவரத்திலும், சரக்கு போக்குவரத்திலும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இதனால் உள்நாட்டு தேவை, வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
* கொரோனா வைரஸ் தாக்கத்தால் புதிய முதலீடுகளில் தாமதம் ஏற்படும். இது நிதித்துறையில் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
* 2022-ம் ஆண்டு மீண்டும் இந்திய பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியை எட்டிப் பிடிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், உலக வங்கியின் தெற்காசிய பிரிவின் தலைமை பொருளாதார வல்லுனர் ஹான்ஸ் டிம்மர் இதையொட்டி கூறியதாவது:-
இந்தியாவின் நிலை நன்றாக இல்லை. உள்நாட்டில் ஊரடங்கு நிலை நீட்டிக்கப்படுமேயானால், உலக வங்கி கணித்து இருப்பதைக் காட்டிலும் பொருளாதார முடிவு மோசமாக இருக்கும். இந்த சவால்களை எதிர் கொள்ள இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றில், முதலில் கொரோனா வைரசை தணிப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும். எல்லோருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதைத் தொடர்ந்து பொருளாதார இழப்பை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக வேலை திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதுவும் உள்ளூர் அளவில் இது முக்கியம். அந்த முயற்சிகள் ஆதரிக்கப்பட வேண்டும்.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் திவால் ஆகாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். காலப்போக்கில் இதெல்லாம் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு உதவும். இது நிலைத்து நிற்கும் பாதையாக இருக்கும். நிதி ரீதியில் மட்டுமல்லாது, சமூக ரீதியிலும்தான். இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியாவுடன் உலக வங்கி இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு முதல் கட்டமாக 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7,400 கோடி) வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. சுகாதாரத் துறையில் அவசர நிலையை கவனிக்க முதல் கட்ட தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை, பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கான கருவிகள் வாங்குவதற்கும், கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் வகை செய்யும் என உலக வங்கியின் தெற்காசிய துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாபர் தெரிவித்தார்.
Leave a Reply