கொரோனா வைரசின் ருத்ர தாண்டவத்தில், உலகிலேயே அமெரிக்கா முதல் இடம் வகிக்கிறது. அங்குதான் அதிக எண்ணிக்கையிலானவர்களை இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது. கூடுதல் உயிர்ப்பலியும் அங்குதான் நேரிட்டிருக்கிறது.

நியூயார்க்,

அமெரிக்க வல்லரசு, தற்போது கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய வைரசின் ருத்ரதாண்டவத்தினால் அதிர்ந்து போய் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கூடுதலான நபர்களை இந்த வைரஸ் அங்கு ஆட்கொண்டு வருகிறது. அதிக எண்ணிக்கையில் உயிர்ப்பலிகளையும் ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தை பேரழிவு மாகாணமாக ஜனாதிபதி டிரம்ப், நேற்றுமுன்தினம்(சனிக்கிழமை) அறிவித்தார். இத்துடன் சேர்த்து, வாஷிங்டன் டி.சி., வெர்ஜீனியா, குவாம், வடக்கு மரியோனா தீவுகள், பியுர்ட்டோ ரிகோ என 50 மாகாணங்களும், இந்த பேரழிவு மாகாணங்களாக அறிவிக்கப்பட்டு விட்டன.

இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு நிகழ்வு ஆகும். இப்படி அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்த வைரசுக்கு எதிராக போராடுவதற்கு மாகாண மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மத்திய அரசின் நிதியை, வளங்களைப் பெற்று பயன்படுத்த முடியும்; ராணுவ என்ஜினீயர்களின் உதவியைப் பெற இயலும்.

கலிபோர்னியா, நியூயார்க் ஆகிய 2 மாகாணங்களிலும், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை தீவிரமாக பின்பற்றும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக அங்கு கோரத்தாண்டவமாடிய கொரோனா வைரஸ் சற்றே பலவீனம் அடைந்திருப்பதாக அவ்விரு மாகாணங்களின் கவர்னர்கள் தெரிவித்துள்ளனர்.

கலிபோர்னியா கவர்னர் கெவின் சாம் நேற்றுமுன்தினம் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில், “வீட்டில் தங்கி இருப்பதன் பொருள், உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதுதான். இது இன்னும் முடியவில்லை. இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதே போன்று நியூயார்க் மாகாணத்தின் கவர்னர் ஆண்ட்ரூ கியுமோ நிருபர்களிடம் பேசுகையில், “பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் நாம் திறந்து விடுவதற்கு எடுக்கிற எந்தவொரு முடிவும், எதை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். நாம் நமது சொந்த அனுபவங்களிலிருந்தும், உலகின் பிற பகுதிகளில் கிடைத்த அனுபவங்க ளிலிருந்தும் நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிட வேண்டும், மக்கள் வேலை செய்ய வேண்டும் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அதை விட முக்கியம், நாம் நமது உயிரை காப்பாற்றிக் கொள்வதுதான்” என்று குறிப்பிட்டார்.

நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) இரவு நிலவரப்படி நியூயார்க் மாகாணத்தில் மொத்தம் 1 லட்சத்து 81 ஆயிரத்து 825-க்கும் அதிகமானோரை இந்த கொலைகார வைரஸ் தாக்கி இருக்கிறது. 8,650-க்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ளது. நியூயார்க் நகரில் மட்டுமே, 98 ஆயிரம் பேர் கொரோனா பிடியில் சிக்கி தவிக்கிறார்கள். 6,300-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

நியூயார்க் நகர மேயர் பில் டி பிளேசியோ, “நியூயார்க் நகரத்தில் நடப்பு (2019-20) கல்வி ஆண்டின் எஞ்சிய காலம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும், இது எளிதான ஒரு முடிவு அல்ல, ஆனால் இது சரியான முடிவு ஆகும். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது நல்ல பலனைத்தருகிறது. கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதை நாம் அனுமதிக்க முடியாது” என டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருக்கிறார்.

இந்தநிலையில் அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தகவல் மையம், நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 2 மணிக்கு வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மக்களை கொரோனா வைரஸ் தாக்கிய நாடு என்ற நிலையை அமெரிக்கா அடைந்துள்ளது.

அங்கு 5 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்து கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த வைரசின் பிடியில் இருந்து மீள முடியாமல் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை, 21 ஆயிரத்து 400-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்க மக்கள் இதையெல்லாம் அறிந்து மிகுந்த துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தாலும், நிம்மதியின்றி தவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *