கொரோனா பற்றிய அச்சத்திற்கு அடிபணியாமல், நம்பிக்கையை பரப்பும் தூதர்களாக இருக்க வேண்டுமென மக்களுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
வாடிகன் நகர்,
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று உலகம் முழுவதும் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்டது.
எனினும் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் ஈஸ்டர் தின கொண்டாட்டங்கள் களையிழந்தன. இந்த நிலையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகன் நகரில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெறும் இந்த சிறப்பு பிரார்த்தனையில் உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வாடிகன் நகரில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நேற்றைய பிரார்த்தனையில் மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
மூத்த கர்தினால்கள் உள்பட 12 பேர் மட்டும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் தலைமையிலான பிரார்த்தனையில் பங்கேற்றனர். மேலும் ஞானஸ்தானம் உள்ளிட்ட வழக்கமான மத சடங்குகள் கைவிடப்பட்டன. அதே சமயம் போப் ஆண்டவர் பிரான்சிசின் பிரார்த்தனை நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. பிரார்த்தனையின் முடிவில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்காலத்தை பற்றியும், மீண்டும் கட்டியெழுப்ப வேண் டிய அனைத்தையும் பற்றியும் பயம் உள்ளது. இது ஒரு வேதனையான நினைவு. இருண்ட நேரம். நமது நம்பிக்கை குறைக்கப்படுகிறது. இவை அனைத்தும் உண்மைதான். ஆனால் இந்த தருணத்தில் கடவுள் நமக்கு திரும்ப திரும்ப சொல்லும் வார்த்தைகள் இவைதான். “பயப்படாதீர்கள், பயப்பட வேண்டாம்”. இது இன்று நமக்கு உரைக்கப்படும் நம்பிக்கையின் செய்தி.
எனவே மக்கள் கொரோனா பற்றிய அச்சத்திற்கு அடிபணிய வேண்டாம். மாறாக இந்த நேரத்தில் மற்றவர்களுக்கு நம்பிக்கையை பரப்பும் தூதர் களாக இருக்க வேண்டும். மரணத்தின் அழுகைகளை மவுனமாக்குவோம். இனி போர் கள் இல்லை என்ற நிலையை அடைய வேண்டும். ஆயுதங் களை உற்பத்தி செய்வதையும், ஆயுத வர்த்தகத்தையும் நிறுத்திவிட்டு ஏழைகளுக்கு உதவுவோம்.
ஏனெனில் மக்களுக்கு தேவை ரொட்டிகளே தவிர, துப்பாக்கிகள் அல்ல. கருக்கலைப்பு மற்றும் அப்பாவி உயிர்களை கொல்வது முடிவுக்கு வரட்டும். எதுவும் இல்லாதவர்களின் வெற்றுக் கைகளை நிரப்ப போதுமான அளவு வைத்திருப்பவர்களின் இதயங்கள் திறந்திருக்கட்டும். இவ்வாறு போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேசினார்.
Leave a Reply