நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவித்தார்.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக் டர் சி.விஜயபாஸ்கர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் தலைமைச் செயலாளர் க.சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு நீட்டிக் கப்பட்டதையொட்டி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நிவாரண பணிகளை தீவிரமாக மேற்கொள்வது பற்றியும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தற்போதைய நிலையில் கொரோனா நோய் தடுப்பு பணிதான் மிகவும் முக்கியம். அதற்குத்தான் தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து இருக்கிறது. அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது. தீவிர நடவடிக்கையின் காரணமாக நோயின் தாக்கம், வீரியம் குறைக்கப்பட்டு இருக்கிறது. கொரோனாவை தடுக்க மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக பணி ஆணை கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வழங்கப்பட்டது. இதற்கான மருந்துகள் வாங்குவதற்காக பிப்ரவரி முதல் வாரம் பணி ஆணை வழங்கப்பட்டது. ரூ.146 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு பணி விரைவாக நடக்கவேண்டும் என்பதற்காக 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. மருத்துவ குழுவினர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் நோய் பரவலை தடுப்பதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசு நிறங்கள் அடிப்படையில் நோய் தொற்று நடவடிக்கைகளை முன்னிறுத்தி உள்ளது. அதன்படி, பச்சை, ஆரஞ்சு, சிவப்பு ஆகிய நிறங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் பிரிக்கப்பட்டு உள்ளன. இதில் பச்சை நிறம் என்றால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று அர்த்தம். 1 முதல் 15 எண்ணிக்கை வரை பாதிப்புள்ள பகுதிகள் ஆரஞ்சு நிறத்திலும், அதற்கு மேல் பாதிப்பு உள்ள பகுதிகள் சிவப்பு நிறத்திலும் வரைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
‘ரேபிட்’ பரிசோதனை கருவிகளை வெளிநாட்டில் இருந்து வாங்குகிறோம். இதற்கான முதற்கட்ட தொகையும் கொடுத்துவிட்டோம். ஆனால், நமக்காக வர இருந்தது வேறு நாட்டுக்கு சென்றுவிட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தற்போது வரை இந்த கருவிகள் வாங்கப்படவில்லை. தமிழகத்துக்கான கருவிகள் விரைவில் வரும். கருவிகள் வந்தவுடன் பணிகள் மேலும் துரிதப்படுத்தப்படும்.
கொரோனா பாதிப்பில் தமிழகம் தற்போது 2-வது நிலையில்தான் இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. புதன்கிழமை (நேற்று முன்தினம்) 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இன்று (அதாவது நேற்று) அது 25 ஆக குறைந்து இருக்கிறது. இன்னும் 2, 3 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையும். அந்த வகையில், அடுத்த 3, 4 நாட்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பூஜ்ஜியமாக வரும். வர வேண்டும். அதைத்தான் அரசு விரும்புகிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து தற்போது வரை 150 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வந்தது. இனி குணமடைந்து வருவோர் எண்ணிக்கை உயரும்.
மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.510 கோடியும், தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ரூ.312.64 கோடியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து தேவையான நிதியை கேட்டு இருக்கிறோம். மத்திய அரசும் பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறது.
மத்திய அரசு தெரிவித்துள்ள வரைமுறைகளின்படி தொழிற்சாலைகளை திறப்பது குறித்து தமிழக அரசு ஆராய்ந்து முடிவு எடுக்கும்.
வருகிற 20-ந் தேதிக்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிப்பது என்பது பற்றியும், மே 3-ந் தேதிக்கு பிறகு படிப்படியாக ஊரடங்கை தளர்த்துவது குறித்தும் ஆராய நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்கும்.
கொரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும். இப்போது அவர்கள் என்ன சம்பளம் பெறுகிறார்களோ, அதை அப்படியே வழங்குவதுடன் கூடுதலாக ரூ.2 லட்சத்தை அரசு வழங்கும்.
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் பத்திரிகையாளர்களின் பங்கும் முக்கியமானது. மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்ப்பவர்கள் அவர்கள். பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில் அவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசு ஏற்கும். துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில் அரசு துணை நிற்கும். அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பேட்டியின் போது, கொரோனா பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும், ஊரடங்கால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் அவர் விளக்கமாக தெரிவித்தார்.
Leave a Reply