இந்தியாவுக்கு விரைவு பரிசோதனை கருவிகள் உள்பட 6½ லட்சம் மருத்துவ உபகரணங்களை விமானம் மூலம் சீனா அனுப்பி வைத்தது.
பீஜிங்,
சீனாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, 2 மாதங்களாக மூடிக்கிடந்த தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன.
பல்வேறு நாடுகள், கொரோனாவின் பிடியில் இருந்து மீளாததால், அதை பயன்படுத்தி, கொரோனா சிகிச்சை, பரிசோதனை தொடர்பான மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உடைகள் உற்பத்தியை தீவிரப்படுத்தி உள்ளன.
அந்த வகையில், இந்தியா கேட்டுக்கொண்டதால், 6 லட்சத்து 50 ஆயிரம் மருத்துவ உபகரணங்களை நேற்று விமானம் மூலம் இந்தியாவுக்கு சீனா அனுப்பி வைத்தது. இத்தகவலை சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
ரேபிட் (விரைவு) ஆன்டி-பாடி பரிசோதனை கருவிகள், சளி மாதிரி எடுக்கும் கருவிகள் உள்பட 6 லட்சத்து 50 ஆயிரம் மருத்துவ உபகரணங்கள், குவாங்சூ விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இத்தகைய வர்த்தக கொள்முதலுக்கான ஏற்பாடுகளையும், இப்பொருட்கள் உரிய நேரத்தில் இந்தியா சென்றடைவதற்கான விமான ஏற்பாடுகளையும் இந்திய தூதரகம் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுதவிர, சீனாவை சேர்ந்த நம்பகமான நிறுவனங்களிடம் ஒரு கோடியே 50 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க இந்தியா ‘ஆர்டர்’ கொடுத்துள்ளதாக விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இதுபோன்ற வர்த்தகத்தால், இந்தியா-சீனா உறவு வலுப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, சீன மருத்துவ கருவிகள் தரம் குறைந்தவையாக இருப்பதாக கூறப்படும் புகார்களுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியான் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
சீன அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் மட்டும் உலக நாடுகள் பொருட்களை வாங்க வேண்டும். பொருட்கள் ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதை மட்டுமே சீன அரசு கவனித்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில், போலி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply